இந்தியா

செல்வப்பெருந்தகை வீட்டில் ரெய்டு- காங்கிரஸ் தலைமை கடும் கண்டனம்

'சோதனை' என்ற போர்வையில் வருமான வரித்துறையால் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருவதற்கு காங்கிரஸ் தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைமை தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தடைந்துள்ள நிலையில், ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, தனது அரசியல் கடமைகளை ஆற்றுவதைத் தடுக்கும் வகையில், 'சோதனை' என்ற போர்வையில் வருமான வரித்துறையால் ஸ்ரீபெரும்புதூரில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது ஒரு வழக்கமான நடவடிக்கை அல்ல. ஒரு முக்கியமான தருணத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை அச்சுறுத்துவதற்கும், அவர்களின் பணிகளைத் தடுப்பதற்கும் பாஜக மத்திய அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்துவதாகும்.

இத்தகைய நடவடிக்கைகள் ஜனநாயகத்தின் ஆணிவேரையே தாக்குகின்றன. எதிர்ப்புக் குரல்களை அடக்குவதும், அரசு எந்திரத்தின் மூலம் அரசியல் எதிரிகளைக் குறிவைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

இந்தியாவின் ஜனநாயகத்தை அச்சுறுத்தலுக்கும் நிர்ப்பந்தத்திற்கும் சுருக்கிவிட முடியாது. மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.