இந்தியா

‘ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது’ - சோனம் வாங்சுக்கின் மனைவி பரபரப்பு குற்றச்சாட்டு!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி இயக்கம் நடத்திவரும் போராட்டம் அரசியல் சார்பற்றது என சோனம் வாங்சுக் மனைவி தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட கல்வித்துறையில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஜூன்.20 முதல் போராட்டம் நடத்திவருகிறது.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல்நாள் (ஜூலை.20) ‘சலோ சன்சத்’ என்ற பெயரில் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியை களைக்க போலீசார் மாணவர்கள், போராட்டக்காரர்கள்மீது போலீசார் சராமாரி தடியடி நடத்தினர்.

போலீசாரின் இந்த அராஜகப்போக்கை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தலைமையில் மறுநாள் (ஜூலை.21) டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமர் இல்லம் முன்பு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தைத் தொடர்ந்து ராகுல் காந்தி, சோனியா காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ராகுல் காந்தியின் இந்தப் போராட்டம் நேர்மையற்றது என சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஆங்மோ விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்,

“பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தில் நேர்மை இல்லை. பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது. இது விழித்தெழுந்த இந்தியா. நேர்மையற்றவர்கள் இளைஞர்களால் தூக்கி எறியப்படுவார்கள்.

சொன்னதைச் செய்தாக வேண்டும் என்பதை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஒவ்வொரு அரசியல் தலைவருக்கும் காட்டியுள்ளது. அவர்களால் இனிமேலும் பொய் பேசவோ அல்லது நேர்மையற்றவர்களாக இருக்கவோ முடியாது.” என தெரிவித்தார்.

மேலும் அரசியல் கட்சிகள் தங்களை இதனுடன் இணைத்துக் கொள்ள முயன்றபோதிலும், இந்தப் போராட்டம் அரசியல் சார்பற்றதாகவே நீடிக்கிறது என தெரிவித்தார்.