ராகுல் காந்தி 
இந்தியா

ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தல்: வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு ராகுல் காந்தி நன்றி

ராஜஸ்தான் கிராமப்புற வாக்காளர்களுக்கு ராகுல் காந்தியின் மனமார்ந்த நன்றி: பா.ஜ.க. ஆட்சிக்கு நேரடி பதிலடி

காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, ராஜஸ்தான் மாநில ஊரகப் பகுதிகளில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். இந்த தேர்தல் தீர்ப்பை, காங்கிரஸ் கட்சிக்கான ஒரு பொறுப்பாகவும், மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வுக்கு விடுக்கப்பட்ட வலுவான செய்தியாகவும் அவர் வர்ணித்தார்.

இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பா.ஜ.க. ஆட்சியில் உள்ள ஒரு மாநிலத்தில் இத்தகைய தேர்தல் முடிவு கிடைத்திருப்பது மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGA), விவசாயிகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் தொடர்பான பாஜகவின் கொள்கைகளை அவர் கடுமையாக விமர்சித்தார். பணவீக்கம், வேலையின்மை மற்றும் மக்கள் இடம்பெயர்வு ஆகியவற்றால் கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

நேரடி பதிலடி:

ராகுல் காந்தி தனது பதிவில், "ராஜஸ்தான் கிராமப்புறங்களில் உள்ள என் சகோதர, சகோதரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள். பஞ்சாயத்து தேர்தலில் நீங்கள் காங்கிரஸ் கட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கை, இப்போது எங்கள் பொறுப்பாக மாறியுள்ளது.

பா.ஜ.க. ஆட்சியில் உள்ள ஒரு மாநிலத்தில் இந்த முடிவு கிடைத்திருப்பது, 'டபுள் என்ஜின்' (மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி) அரசுக்கு கொடுக்கப்பட்ட நேரடி பதிலடியாகும். பா.ஜ.க., மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை சிதைத்தது, விவசாயிகளை நஷ்டத்திற்கு தள்ளியது. மேலும் பஞ்சாயத்துகளின் அதிகாரங்களை பறித்தது. பணவீக்கம், வேலையின்மை மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றால் கிராமங்கள் வெறிச்சோடிப் போயுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளார்.

கிராமப்புற மக்கள் தங்கள் பகுதிகளில் நடக்கும் மாற்றங்களையும், எதிர்கொள்ளும் சவால்களையும் தொடர்ந்து கவனித்து வந்தனர் என்பதை வலியுறுத்திய காங்கிரஸ் தலைவர், இந்த தேர்தல் முடிவு அந்த பிரச்சினைகளுக்கு மக்கள் அளித்த பதிலாகும் என்று கூறினார்.

"கிராமங்கள் அனைத்தையும் கவனித்து கொண்டிருந்தன, அனைத்தையும் பொறுத்து கொண்டிருந்தன. இப்போது அவை தங்கள் குரலை பதிவு செய்துள்ளன. இது ராஜஸ்தானின் தீர்ப்பு மட்டுமல்ல; இது நாட்டின் ஒவ்வொரு கிராமத்தின் குரலும் ஆகும்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT