மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலைக் கையாள்வதற்குத் தேவையான திசையும், உத்தியும் மோடி அரசிடம் இல்லை.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள மேற்கு வங்கம், தமிழ்நாடு, அசாம், கேரளா , புதுச்சேரி தேர்தல்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலைகளை மத்திய அரசு உயர்த்தக்கூடும்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவதும், தொழில்துறை எரிபொருள் விலைகளில் ஏற்படும் கடும் உயர்வும், ஒவ்வொரு இந்தியனையும் பாதிக்கும், விலை உயர்வுகளுக்கு வழிவகுக்கும்.
ஆனால் மத்திய அரசாங்கம் வெற்றுப் பேச்சுகளை மட்டுமே பேசி, அனைத்தும் இயல்பாக இருப்பதாகக் கூறினாலும், விலை உயர்வு ஒவ்வொரு வீட்டையும் பாதிக்கும் என்பதே யதார்த்தம்.
ஏனெனில் டாலருக்கு எதிராக ரூபாய் வலுவிழந்து 100-ஐ நோக்கிச் செல்வதும், தொழில்துறை எரிபொருள் விலைகளில் ஏற்படும் கடும் உயர்வால் உற்பத்தி மற்றும் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும்.
வெளிநாட்டு நிறுவன முதலீடுகள் இன்னும் வேகமாக வெளியேறி, பங்குச் சந்தையின் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இது ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரத்தையும் நேரடியாகவும் ஆழமாகவும் பாதிப்பது உறுதி. உங்கள் தட்டில் (உணவுத் தட்டில்) இறுதியில் என்ன மிச்சமிருக்கிறது என்பதே உண்மையான கேள்வி என பதிவிட்டுள்ளார்.