ராகுல் காந்தி
இந்தியா

ஜார்க்கண்டில் சட்டசபையை நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது தவறானது: ராகுல் காந்தி

ஜார்க்கண்ட்டில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வேலை வாய்ப்புக்கான அம்மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசு பல்வேறு கட்டங்களாக மாணவர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.

இதற்கிடையே பல அதிகாரிகளை அரசு நீக்கியது. இருந்தபோதிலும் போராட்டத்தை மாணவர்கள் கைவிடவில்லை. இன்று ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தொடங்கியது. மாணவர்கள் சட்டமன்றத்தை நோக்கி பேரணி மேற்கொண்டனர்.

போலீசார் தடியடி

காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறி மாணவர்கள் முன்னேறிச் சென்றனர். இதனால் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மாணவர்களுக்கு எதிராக அடக்குமுறையை ஏவியது தவறானது என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்க பதிவில் "ஜார்க்கண்ட் அரசு தொடர்ந்து மாணவர்களின் குறைகளை கேட்டு, அதை உடனடியாக தீர்க்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மீது அமைச்சர் குற்றச்சாட்டு

இன்று காலை ஜார்க்கண்ட் சட்டசபை கூட்டம் தொடங்கியது. போராட்டம் குறித்து அமளி ஏற்பட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அமைச்சர் சுதிவ்யா குமார், மாணவர்களின் போராட்டத்தை எதிர்க்கட்சியான பாஜக கைப்பற்றிக் கொண்டதாக குறு்றம்சாட்டினார்.

மேலும், மாணவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக எல்லா முயற்சிகளையும் அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், மாணவர்களின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். எனினும், போராட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டுக் கொண்டு வந்து பாஜக, அவர்களை தவறாக வழி நடத்துகிறார்கள் சட்டசபையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் கைது

இதனிடையே தேர்வு முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, பாஜகவை சேர்ந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான பாபுலால் மராண்டி ஆகியோர் தலைமையில் பாஜக தொண்டர்கள் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் இல்லத்தின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முதல்வர் இல்லத்தின் வெளியே போராட்டம் நடத்திய பாபுலால் மராண்டி உள்ளிட்ட பாஜக தலைவர்களை மாநிலக் காவல்துறை கைது செய்து அப்புறப்படுத்தியது.

பாபுலால் குற்றச்சாட்டு

மாணவர்கள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிரப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஜார்க்கண்ட் அரசு அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தேவையின்றி காலந்தாழ்த்தி வருவதாக பாபுலால் மராண்டி சாடினார்.

JPSC, JSSC மற்றும் CGL தேர்வுகளில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் முதன்மைக் கோரிக்கையை நிறைவேற்றாமல், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே மாநில அரசு முயல்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.