இந்தியா

இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி..!- ராகுல் காந்தி

கல்வி முறையை அழிப்பவர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவித்தவர் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம்.

இளைஞர்களின் எதிர்காலத்தை மிக அதிகமாக சீர்குலைத்தவர் பிரதமர் மோடி என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இளைஞர் எதிர்காலத்தை சீரழிக்க முயன்றோர் தப்ப முடியாது என பிரதமர் மோடி பதிவிட்ட நிலையில் ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

கல்வி முறையை அழிப்பவர்களை பாதுகாத்து அவர்களை ஊக்குவித்தவர் பிரதமர் மோடி.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இளைஞர் எதிர்காலத்தை சீர்குலைத்ததற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

போராட்டம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்திரில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது போராட்டம் நேற்று 33-வது நாளை எட்டியது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

கடந்த 20-ந் தேதி இந்த போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி நடத்திய பேரணி பெரிய வன்முறையில் முடிந்தது.

இந்த விவகாரத்தை முன்னெடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரசார் நடத்திய போராட்டம் பா.ஜ.க.வுக்கு பெரிய சவாலாக அமைந்தது.

போலீஸ் தடியடியில் பல இளைஞர்கள் காயம் அடைந்த பிறகும் ஜந்தர் மந்தரில் இன்னும் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல் காந்தி பதிலடி

இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

இளைஞர்களின் எதிர்காலத்தை மிகவும் சீர்குலைத்தவர் நீங்கள்தான்.

எங்கள் கல்வி முறையை முழுமையாகக் கைப்பற்றி அழிப்பதை நீங்கள் அனுமதித்து ஊக்குவித்தீர்கள் - மேலும் அதற்குக் காரணமான ஒவ்வொருவரையும் பாதுகாத்தீர்கள்.

மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவாக உள்ளன:

1. தர்மேந்திர பிரதானைப் பதவியிலிருந்து நீக்குங்கள்.

2. மாணவர்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்.

3. அவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி பதிவு

முன்னதாக, பிரதமர் மோடி போராட்டம் தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

* இளைஞர் நலன் மற்றும் எதிர்காலத்தைவிட முக்கியமானது எதுவும் இல்லை.

* மாணவர்களின் நலனை பாதுகாக்க தொடர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் விரைவு நீதிமன்றம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

* தேர்வுத்தாள் கசிவில் தொடர்புடையோருக்கு கடும் தண்டனை கிடைப்பதை உறுதி செய்ய விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும்.

* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தேவையான அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

* வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றமிழைத்த அனைவரும் தண்டிக்கப்படுவர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.