பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க ஏ.கே 47 ரக துப்பாக்கியை காவலர் ஒருவர் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டிய நிலையில், அவருக்கு பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
பீகாரில் மாநிலம் தழுவிய பந்த் (முழு அடைப்பு) போராட்டம் நடைபெற்றது. அப்போது மாணவர் அமைப்புகள் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.
இதையடுத்து போராட்டாத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது காவலர் ஒருவர், ஏகே-47 துப்பாக்கியை பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இணையத்தில் பரவின.
இதைதொடர்ந்து துப்பாக்கியை பயன்படுத்திய காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
மேலும், போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை கொலை செய்வதற்கு, யார் அதிகாரம் கொடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், மக்களவை உறுப்பினருமான சம்பித் பத்ரா, ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்கட்சித் தலைவர் மிகுந்த பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்தி இருப்பது வெட்கக்கேடான செயல் என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவில் எதிர்கட்சி தலைவர் பதவியில் இருக்கும் ஒருவரால், இத்தகைய பொய் பரப்பப்படுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.
இந்த நாட்டில் காவல்துறை எப்போதாவது போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஏகே-47 துப்பாக்கிகளை பயன்படுத்தி இருக்கிறதா?
அந்த மாதிரி சம்பவம் எப்போதாவது நடந்திருக்கிறதா? ஏகே-47 துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக ராகுல் காந்தியால் எப்படி கூற முடியும்?
இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற அவதூறுகளையும் பொய்களையும் பரப்பியதற்காக ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இதுபோன்ற பிரச்சாரங்களை செய்து, தவறான தகவல்களை பரப்புவதன் மூலம், ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் நாடு முழுவதும் பீதியையும், குழப்பத்தையும், அராஜகச் சூழலையும் உருவாக்க விரும்புகிறார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ராகுல் காந்தி ஒரு பொறுப்பான எதிர்கட்சி தலைவராக நடந்துகொண்டு, இதுபோன்ற தவறான செய்திகளை பரப்பியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இயற்கையாகவே பிரச்சனைகளை தீர்ப்பது ராகுல் காந்தியின் நோக்கம் அல்ல. அமளியை தூண்டிவிட்டு, செயற்கையான கோபத்தை உருவாக்கி ஒரு போராட்டத்தை உருவாக்க முயற்சிப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக அராஜகத்தை உருவாக்க முயற்சிப்பது ஆகியவையே ராகுல் காந்தியின் ஒரே குறிக்கோளாக உள்ளது,” என்று பத்ரா கூறினார்.