அமேதியில் போட்டியிட தயங்கிய ராகுல் காந்திக்கு அகிலேஷ் யாதவ் அளித்த தைரியமே ராய்பரேலி வெற்றிக்கு காரணம் என எம்பி சிவ்பால் சிங் படேல் அதிரடி பேச்சு.
உத்தரப் பிரதேச அரசியலில் இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதி கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்த உரசல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், சமாஜ்வாதி கட்சியின் பிரதாப்கர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சிவ்பால் சிங் படேல் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
சமாஜ்வாதி எம்பி சிவ்பால் சிங் படேல் பேசியதாவது, "சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றால், 2024 மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தையே கைவிடும் நிலைக்குச் சென்றார். பாரம்பரியத் தொகுதியான அமேதியில் போட்டியிட அவர் மிகவும் பயந்ததால் தான் ராய்பரேலிக்கு மாறினார்.
நமது கட்சியின் தேசியத் தலைவர் அகிலேஷ் யாதவ் அவருக்குத் தைரியம் கூறி, ராகுல் காந்தி போட்டியிடாவிட்டால் அத்தொகுதியில் சமாஜ்வாதி கட்சியே வேட்பாளரை நிறுத்தும் என எச்சரித்தார். அதன்பிறகே ராகுல் காந்தி ராய்பரேலியில் போட்டியிட ஒப்புக்கொண்டார். சமாஜ்வாதி தொண்டர்களின் உழைப்பாலும் வாக்கு களத்தாலும் தான் காங்கிரஸ் உ.பி-யில் வெற்றி பெற்ற 6 தொகுதிகளையும் கைப்பற்றியது" என்று தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 தொகுதிகள் வரை கோருவதாக வெளியாகும் செய்திகளுக்கு எம்பி சிவ்பால் சிங் கடுமையாகப் பதிலளித்துள்ளார். சமாஜ்வாதி கட்சி உத்தரப் பிரதேசத்தில் மிகப்பெரிய அண்ணன். நாங்கள் கடந்த மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். எனவே காங்கிரஸ் கட்சி எங்களுக்கு 50 தொகுதிகளுக்கு மேல் கேட்கக்கூடாது, கொடுப்பதை ஏற்று மகிழ்ச்சியடைய வேண்டும். தனித்து போட்டியிட்டால் காங்கிரஸ் மீண்டும் பூஜ்ஜிய நிலைக்குத் தான் செல்லும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சமாஜ்வாதி எம்பியின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சிற்கு உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி உடனடியாகப் பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், "இப்படிப்பட்ட பொறுப்பற்ற கருத்துக்களைப் பேசும் தலைவர்களைச் சமாஜ்வாதி கட்சி தலைமை உடனே கட்டுப்படுத்த வேண்டும். இந்தியா கூட்டணி அமைந்த காரணத்தால் தான் அவர் இன்று எம்பி ஆக முடிந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். தனது எல்லையை அறிந்து பேச வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சனை கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்திய நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது கட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். தொகுதிப் பங்கீடு குறித்த கருத்துக்களையும் கோரிக்கைகளையும் பொதுவெளியில் பேசாமல், கட்சியின் உட்கட்சி விவாதங்களில் மட்டுமே தெரிவிக்க வேண்டும் என்றும், முறையான பேச்சுவார்த்தையின் போது அவை பரிசீலிக்கப்படும் என்றும் அவர் நிலைமையைச் சமாளிக்கும் வகையில் பேசியுள்ளார்.