மேற்கு வங்க முன்னாள் முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:
அபிஷேக் பானர்ஜி எம்.பி. மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் மீதான தாக்குதல் என்பது ஒரு தனி நபர் மீதான தாக்குதல் மட்டுமல்ல. அது அவரை தேர்ந்தெடுத்த மக்கள் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும்.
இது பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியல் ஆகும். அரசியல் வேறுபாடுகள் ஒருபோதும் வன்முறையை நியாயப்படுத்த முடியாது.
மத்திய அரசும், மேற்கு வங்காள அரசும் குற்றவாளிகள் மீது உடனடியாக நட வடிக்கை எடுக்கவேண்டும். எந்தவொரு மக்கள் பிரதிநிதியும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களது பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அவர் (அபிஷேக் பானர்ஜி) விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அபிஷேக் பானர்ஜிக்கு மருத்துவமனையில் போதுமான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், பா.ஜ.க.வினர் ஆஸ்பத்திரிக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி இருந்தார்.
அப்போது ராகுல் காந்தி அவரை தொடர்பு கொண்டு போனில் பேசி உள்ளார். அபிஷேக்கின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறியதாவது:
ராகுல் காந்தி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னிடம் சொல்லுங்கள். அபிஷேக் பானர்ஜியை சிகிச்சைக்காக ஐதரபாத்துக்கோ அல்லது வேறு இடத்துக்கோ அழைத்து செல்ல நான் ஏற்பாடு செய்கிறேன் என கூறியதாக தெரிவித்தார்.