மத்திய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். நடப்பு கல்வி ஆண்டின் பாதியில், சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 'மும்மொழி கொள்கை' கட்டாயமாக்கப்படுவதை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
அவரது கடிதத்தில், கல்வியாண்டு நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தக் கொள்கையை திடீரென அமல்படுத்துவது மாணவர்கள், பெற்றோர் மற்றும் பள்ளிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தேவையான அளவு தகுந்த ஆசிரியர்கள், பாடப்புத்தகங்கள் மற்றும் பயிற்சி வசதிகள் பல மாநிலங்களில் இன்னும் முழுமையாக ஏற்படுத்தப்படவில்லை. மேலும், புதிய மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு முன் மாநில அரசுகள், கல்வியாளர்கள், பெற்றோர் அமைப்புகள் மற்றும் மொழியியல் நிபுணர்களுடன் விரிவான ஆலோசனை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். போதுமான நடவடிக்கைகள் இன்றி கொள்கையை அமல்படுத்துவது கல்வி முறையில் குழப்பத்தையும் கற்றல் இடர்பாடுகளையும் உருவாக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த அவசர முடிவு, குறிப்பாக இந்தி பேசாத தென்னிந்திய மற்றும் வடகிழக்கு மாநில மாணவர்களைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும் பழங்குடியின மொழிகள் பல சிபிஎஸ்இ-யின் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் பட்டியலில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், தீர்ப்பு ஜூலை 15, 2026 அன்று தான் வரவுள்ளது. ஆனால், அதற்கு முன்பாகவே (ஜூலை 1) கொள்கையை அமல்படுத்த சிபிஎஸ்இ முயல்வது பல்லாயிரக்கணக்கான பள்ளிகளின் கல்வித் திட்டமிடலைச் சீர்குலைக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமர் மோடி இதில் உடனடியாகத் தலையிட்டு கொள்கை அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும்." என வலியுறுத்தியுள்ளார். "தேசிய கல்விக் கொள்கை" அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கற்றலை வலுப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் செயல்படுத்தும் காலம் மற்றும் நடைமுறை குறித்து நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில் திக்விஜய சிங்கின் கோரிக்கை அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.