பீகார் மாநிலத்தின் பங்கிபூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 'ஜன சுராஜ் கட்சி' நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தனது எதிர்தரப்பான பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை விடத் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
பங்கிபூர் தொகுதியில் மொத்தம் திட்டமிடப்பட்டுள்ள 31 சுற்று வாக்கு எண்ணிக்கைகளில், 4 சுற்றுகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல்படி, ஜன சுராஜ் கட்சியின் பிரசாந்த் கிஷோர் 6,269 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
பாஜக வேட்பாளர் நீரஜ் குமார் சின்ஹா 5,124 வாக்குகளுடன் இரண்டாம் இடத்திலும், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் ரேகா குமாரி 884 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
பா.ஜ.க வேட்பாளரை விட 1,145 வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாந்த் கிஷோர் முன்னிலையில் இருக்கிறார்.
கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடைபெற்ற இந்த இடைத்தேர்தல், தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோரின் முதல் நேரடித் தேர்தல் களம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க-வின் பாரம்பரியமான மிக வலுவான கோட்டையாகக் கருதப்படும் இந்த பங்கிபூர் தொகுதி, அங்கு எம்.எல்.ஏ-வாக இருந்த பா.ஜ.க தலைவர் நிதின் நபின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து காலியானது குறிப்பிடத்தக்கது.
பாட்னாவில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பல அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தற்போது வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் 27 சுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை எஞ்சியுள்ளது.
முன்னதாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர், ' அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்களுக்குப் பாதுகாப்பான தொகுதிகளைத் தேடுவார்கள். ஆனால், நான் அதற்கு நேர்மாறாகச் செய்கிறேன்.
பீகார் மக்கள் சாதி, மதங்களைக் கடந்து வாக்களிக்க வேண்டும் என்ற செய்தியைச் சொல்லவே பாஜக -வின் கோட்டையான பங்கிப்பூரைத் தேர்ந்தெடுத்தேன்.
லாலு பிரசாத் யாதவ் மீதான பயத்தால் பாஜக -விற்கும், பாஜக மீதான பயத்தால் லாலுவிற்கும் மக்கள் வாக்களிப்பதை நிறுத்த வேண்டும்' என்று தனது அரசியல் நோக்கத்தை விளக்கியுள்ளார்.