மகாராஷ்டிராவில் பிளிங்கிட் டெலிவரி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்வதற்காக தனது பைக்கில் ஒரு நாய் குட்டியுடன் வந்த நிகழ்வு இணையத்தில் பயனர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வரும் ரோஷன் மாத்ரே, பிளிங்கிட் ஆன்லைன் டெலிவரி ஆப்பில் ஒரு பொருளை ஆர்டர் செய்திருந்தார்.
இதையடுத்து தான் ஆர்டர் செய்த பொருளை வாங்குவதற்காக, அவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே வந்துள்ளார்.
அப்போது டெலிவரி ஊழியர் தனது பைக்கின் முன்னால் நாய்க்குட்டி ஒன்றை வைத்திருந்ததை பார்த்து மாத்ரே வியப்படைந்துள்ளார்.
பின்னர் டெலிவரி ஊழியரிடம் நாய்க்குட்டியை பற்றி, ஐடி ஊழியர் விசாரித்துள்ளார்.
அப்போது டெலிவரி ஊழியர், “பொருட்களை டெலிவரி செய்வதற்காக வெளியே சென்றபோது, சாலையில் அடிபட்டு இந்த நாய்க்குட்டி பரிதாபமாக கிடந்தது.
இதையடுத்து பிளிங்கிட் நிறுவனத்திற்கு இந்த நாய்க்குட்டியை எடுத்து சென்று அங்கு சிகிச்சை அளித்தோம். பின்னர் இந்த நாய்க்குட்டி அங்கேயே எங்கள் பராமரிப்பில் இருந்துவிட்டது.
பிளிங்கிட் ஊழியர்கள், ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களை டெலிவரி செய்வதற்காக வெளியில் செல்லும்போது, இந்த நாய்க்குட்டி அவர்களுடன் பைக்கில் வரும்” என தெரிவித்துள்ளார்.
இதை கேட்ட ஐடி ஊழியர், நாய்க்குட்டியையும் டெலிவரி ஊழியரையும் போட்டோ எடுத்து தனது லிங்க்ட்-இன் வலைப்பக்கத்தில் பகிர்ந்தார்.
இதையடுத்து ஐடி ஊழியரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி, பயனர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து பயனர் ஒருவர் கூறுகையில், இந்த நிகழ்வு மனித நேயத்தின் மீது மீண்டும் நம்பிக்கையை தருவதாக பதிவிட்டார்.
மேலும் அவர், டெலிவரி ஊழியர்கள் தங்களின் பணிச் சுமைக்கு மத்தியிலும், நாய்க்குட்டியை அழைத்து செல்வது நெகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறினார்.
மற்றொரு பயனர், அந்த நாய்க்குட்டி 3 இடியட்ஸ் படத்தில் வருவதை போன்று, எங்கு சென்றாலும் தனது நண்பர்களுடன் செல்வதாக பதிவிட்டார்.