Punjab man held for sharing troop movements via CCTV to Pakistan 
இந்தியா

பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ நடமாட்டம் குறித்து நேரலை தகவல்- பஞ்சாப் நபர் கைது

சிம் அடிப்படையிலான, சூரிய சக்தியில் இயங்கும் சிசிடிவி கேமராக்களை இக் குழுக்கள் பல்வேறு இடங்களில் திட்டமிட்டு நிறுவி வருவதாக பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.

பஞ்சாபின் பதான்கோட்டில், இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் நடமாட்டம் குறித்த முக்கியத் தகவல்களை பாகிஸ்தானில் உள்ள தனது முகவர்களுடன் பகிர்ந்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு உளவு வலையமைப்பை காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையின்படி, பல்ஜித் சிங் என அடையாளம் காணப்பட்ட அந்த நபர், பதான்கோட்டில் உள்ள சக் தாரிவால் கிராமத்தைச் சேர்ந்தவர் என்று பஞ்சாப் காவல்துறை தெரிவித்தது.

தேசிய நெடுஞ்சாலை-44-ல் உள்ள ஒரு பாலத்திற்கு அருகே அமைந்துள்ள கடையில், ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் நோக்கத்துடன் அவர் ஒரு சிசிடிவி (CCTV) கேமராவைப் பொருத்தியிருந்ததாகக் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது, ​​ஜனவரி மாதம் சுஜன்பூர் அருகே நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையில் இணைய அடிப்படையிலான சிசிடிவி கேமராவைப் பொருத்தியதாக சிங் ஒப்புக்கொண்டார்.

மேலும், துபாயில் உள்ள அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்தும் அவர் வழிகாட்டுதல்களைப் பெற்று வந்துள்ளார். இதற்காக அவருக்கு ரூ.40,000 கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள ஒருங்கிணைப்பாளர்களுடன் தொடர்பில் இருந்த நான்கு அலைபேசிகள் கைப்பற்றப்பட்டன; மேலும், சிம் கார்டு மூலம் இயங்கும் ஒரு CCTV கேமராவும், ஒரு WiFi சாதனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

பாதுகாப்புப் படைகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களைக் கண்காணித்து, மொபைல் செயலிகள் மூலம் பாகிஸ்தானில் உள்ள கட்டுப்பாட்டாளர்களுக்கு நேரடிக் காட்சிகளை அனுப்புவதற்காக, இந்தக் குழுக்கள் சிம் அடிப்படையிலான, சூரிய சக்தியில் இயங்கும் சிசிடிவி கேமராக்களை பல்வேறு இடங்களில் திட்டமிட்டு நிறுவி வருவதாக பஞ்சாப் காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் தெரிவித்தார்.