இந்தியா

பஞ்சாப் தலைமை காவலர் படுகொலை - பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஆதரவு பயங்கரவாத குழு பொறுப்பேற்பு

தலைமை காவலர் சுடப்பட்டு, அவரது தலையில் குண்டு பாய்ந்துள்ளதாக கூடுதல் டிஜிபி பர்வீன் குமார் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் காவல்துறை தலைமை காவலர் ஒருவர் நேற்று மர்மமான முறையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழு தெஹ்ரீக்-இ-தாலிபான் ஹிந்துஸ்தான் பொறுப்பேற்றுள்ளது.

பஞ்சாபில் சுஜன்பூர் காவல் நிலையத்தில் தொழில்நுட்ப சேவை பிரிவில் தலைமை காவலராக 42 வயதான வினோத் குமார் என்பவர் பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று பயிற்சியை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது, குர்தாஸ்பூரில் உள்ள மான்கெளர் புறவழிச்சாலை அருகே தலையில் காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து தலைமை காவலர் சுடப்பட்டுள்ளதாகவும், அவரது தலையில் குண்டு பாய்ந்துள்ளதாகவும் கூடுதல் டிஜிபி பர்வீன் குமார் தெரிவித்துள்ளார்.

சிரோமணி அகாலி தள தலைவர்

இந்த தாக்குதல் குறித்து சிரோமணி அகாலி தள தலைவர் பிக்ரம் சிங் மஜிதியா கூறுகையில், முகமூடி அணிந்த இருவர் தலைமை காவலரை கடத்தி சென்று சுட்டு கொன்றதை சிசிடிவி காட்சிகள் காட்டுவதாக கூறியுள்ளார்.

மேலும், ஒரு தலைமை காவலரே கடத்தப்பட்டு கொல்லப்பட்ட முடியுமானால், சாதாரண பஞ்சாபியர்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

பஞ்சாபில் இந்த ஆண்டில் இதுவரையில் காவலர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில், ஊர்க்காவல் படை வீரர்கள் உட்பட ஐந்து காவலர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஆதரவு

இந்த நிலையில் காவலர் உயிரிழந்துள்ள சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுவான தெஹ்ரீக்-இ-தாலிபான் ஹிந்துஸ்தான் பொறுப்பேற்றுள்ளதாக பஞ்சாபில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும் அந்த சுவரொட்டியில் பாதுகாப்பு படையினரை குறிப்பிட்டு, நாங்கள் தெருக்களில் குறைவாகவும், வீடுகளில் அதிகமாகவும் கொலை செய்வோம் என குறிப்பிட்டுள்ளது.

SCROLL FOR NEXT