பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2022 மார்ச் அன்று நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தலைமையிலான கட்சி மொத்தமுள்ள 117 இடங்களில் 92 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது.
இதையடுத்து அம்மாநிலத்தின் முதல்வராக பகவந்த் மான் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவர் தலைமையிலான பஞ்சாப் அரசு, தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வுகளுக்கு எதிராக கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள் ஆண்டுதோறும் 5 சதவீதத்திற்கும் அதிகமாக கட்டணத்தை உயர்த்த அனுமதிக்ககூடாது என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், “ தனியார் பள்ளிகளின் தன்னிச்சையான கட்டண உயர்வுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த நாட்டின் முதல் மாநிலமாக பஞ்சாப் திகழ்கிறது.
கல்விக் கட்டணம், நூலகக் கட்டணம், மேம்பாட்டுக் கட்டணம் மற்றும் அது தொடர்பான பிற கட்டணங்கள் உட்பட, பள்ளிகளால் விதிக்கப்படும் அனைத்துக் கட்டணங்களுக்கும் இந்த உச்சவரம்பு பொருந்தும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 15 சதவீதத்திற்கும் அதிகமாகக் கட்டணத்தை உயர்த்திய பள்ளிகள், அனுமதிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் வசூலித்த கூடுதல் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு பள்ளி தனது கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியிருந்தால், மாணவர்களிடமிருந்து வசூலித்த கட்டணத்தில் 35 சதவீதத்தைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
நிதி ஆயோக் சமீபத்தில் நடத்திய மதிப்பீட்டில் கேரளாவைப் பின்னுக்குத் தள்ளி, பள்ளிக் கல்வித் தரவரிசையில் பஞ்சாப் மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது” என்று கூறினார்.