இந்தியா

பா.ஜகவில் ஆம்ஆத்மி எம்.பி.க்கள்: ஜனாதிபதியை சந்திக்கிறார் பஞ்சாப் முதல் மந்திரி

ராகவ் சத்தா உள்பட 7 ஆம் ஆத்மி எம்.பி.க்கள் சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

பாராளுமன்ற மேல்சபையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 10 எம்.பி.க்கள் இருந்தனர். இதில் ராகவ் சத்தா உள்பட 7 எம்.பி.க்கள் சமீபத்தில் பா.ஜ.க.வில் இணைந்தனர். இவர்கள் பஞ்சாப்பில் இருந்து மேல்சபைக்கு தேர்வானவர்கள். இந்த இணைப்புக்கு மேல்சபை தலைவர் ஒப்புதல் அளித்தார். இதனால் ஆம் ஆத்மியின் பலம் 3 ஆகக் குறைந்தது. அதே நேரம், பா.ஜ.க.வின் பலம் அதிகரித்தது.

இந்நிலையில், பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் ஜனாதிபதி திரவுபதி முர்முவை மே 5-ம் தேதி சந்திக்கிறார். இதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பகவந்த் மான் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

பஞ்சாப் மக்கள் அளித்த முடிவையும், ஜனநாயக கொள்கையையும் பாதுகாப்பதே எங்கள் கடமை.

ஜனாதிபதி திரவுபதி முர்முவை வரும் 5-ம் தேதி மதியம் 12 மணிக்கு சந்திக்க அவர் நேரம் ஒதுக்கியுள்ளார்.

அனைத்து பஞ்சாப் எம்.எல்.ஏ.க்களையும் சந்திக்க நேரம் கேட்ட போதிலும், எனக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அனைத்து எம்.எல்.ஏ.க்க.ளுடன் ஜனாதிபதி மாளிகைக்குச் செல்வேன். அவர்கள் வெளியே காத்திருப்பார்கள். நான் மட்டும் சென்று பஞ்சாப் குரலையும், மக்கள் நிலைப்பாட்டையும் ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பேன்.

இந்தச் சந்திப்புக்கு பிறகு எங்களின் அடுத்தகட்ட நகர்வு குறித்து தெரிவிக்கப் படும். விலைமதிப்பற்ற தங்களது நேரத்தை

ஒதுக்கியதற்காக ஜனாதிபதிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.