ஆம் ஆத்மி கட்சி 2027 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது 40 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை இன்று (சனிக்கிழமை) வெளியிட்டது.
பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாபில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான 40 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயலாளர் பங்கஜ் குப்தா வெளியிட்டார்.
தூரி தொகுதியில் முதலமைச்சர் பகவந்த் மான் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார்.
கோட்கபுரா தொகுதியில் சட்டமன்ற சபாநாயகர் குல்தார் சிங் சந்தவானுக்கும், லூதியானா மேற்கு தொகுதியில் அமைச்சர் சஞ்சீவ் அரோராவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மால்வா, மாஜா மற்றும் தோபா பிராந்தியங்களில் உள்ள பல்வேறு சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
அமிர்தசரஸ் தெற்கில் இருந்து டாக்டர் இந்தர்பீர் சிங் நிஜ்ஜார், எஸ்ஏஎஸ் நகரிலிருந்து குல்வந்த் சிங், ஹோஷியார்பூரில் இருந்து பிரம்மா ஷங்கர் ஷர்மா ஜிம்பா, படாலாவில் இருந்து அமன் ஷேர் சிங், அஜ்னாலாவிலிருந்து குல்தீப் சிங் தலிவால், தர்ன் தரனில் இருந்து ஹர்மீத் சிங் சந்து ஆகியோருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.
லூதியானா கிழக்கு தொகுதியில் தல்ஜித் சிங் கிரேவால் போலாவும், லூதியானா மத்திய தொகுதியில் அசோக் பிரசார் பாப்பியும் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். லூதியானா மேற்கு தொகுதியில் போட்டியிடவுள்ள அமைச்சர் சஞ்சீவ் அரோரா தற்போது சிறையில் உள்ளார்.