மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 3 வயது சிறுமியை 65 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.
புனே அருகில் உள்ள நஸ்ராப்பூர் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் சிறுமியைக் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, 65 வயது முதியவர் ஒருவர் அச்சிறுமியை ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது.
"பசுக் கன்றைக் காண்பிக்கிறேன்" என்று ஆசை வார்த்தை கூறி அவர் சிறுமியை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த அவர், சிறுமியின் முகத்தை கல்லால் தாக்கி கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
அடையாளத்தை மறைக்க சிறுமியின் உடலைத் தொழுவத்தில் இருந்த சாணக் குழியில் புதைத்துள்ளார்.
இரவு 7:30 மணியளவில் தலை சிதைந்த நிலையில் சிறுமியின் சடலத்தை போலீஸார் மீட்டனர்.
குற்றவாளியான அந்த 65 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மீது 1998 மற்றும் 2015 ம் ஆண்டுகளில் ஏற்கனவே சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
சிறுமிக்கு நேர்ந்த கொடூரத்தால் ஆத்திரமடைந்த நஸ்ராப்பூர் கிராம மக்கள் புனே-சதாரா நெடுஞ்சாலையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அப்பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்தது.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்துள்ள அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
குற்றவாளிக்கு மரண தண்டனை பெற்றுத் தர அரசு தரப்பில் கடும் வாதங்கள் முன்வைக்கப்படும் என்றும், இதற்காகச் சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.