டெல்லியில் பிரதமர் இல்லம் அருகே நீட் தேர்வு முறைகேடு தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்தி ஜூன்.20 முதல் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று நாடாளுமன்றத்தில் நோக்கி பேரணியாக சென்றனர்.
இந்த பேரணியின்போது போலீசார் இளைஞர்கள் மற்றும் பெண்கள்மீது சராமாரி தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் இந்த தாக்குதலை கண்டித்து இன்று காங்கிரஸார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்கள் மீதான காவல்துறையின் அராஜகப் போக்கிற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா பதவி விலகவேண்டும் என வற்புறுத்தி போராட்டத்தை தொடங்கினர்.
ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மல்லிகார்ஜூனே கார்கே, பிரியங்கா காந்தி, வேணுகோபால், கர்நாடகா மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களும் மற்றும் பல கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் கலந்துகொண்டனர்.
போராட்டத்திற்கு நடுவே மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ராகுல் காந்தியிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பேச்சுவார்த்தை ஒத்திவராத நிலையில் கிட்டத்தட்ட 3 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டம் தொடர்ந்தது. தொடர்ந்து பிரதமரின் இல்லத்தை நோக்கி பேரணியாக சொல்ல முற்பட்டனர்.
இந்தப் பேரணியை கலைக்க முற்பட்டபோது காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை போலீசார் கைது செய்தனர். மேலும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வையும் கைது செய்தனர்.