இந்தியா

சொத்து தகராறு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை- கர்நாடகாவில் கும்பல் வெறிச்செயல்

அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர்.

சொத்து தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வெட்டிக்கொலை செய்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சொத்து தகராறு

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் சடச்சனா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோவிந்தாப்புரா கிராமத்தை சேர்ந்தவர் அப்பு கவுடா. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் ரேவணசித்தப்பா. இவர்கள் 2 பேர் குடும்பத்தினருக்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாக 10 ஏக்கர் நிலத்துக்காக சொத்து தகராறு இருந்த வந்துள்ளது.

இந்தநிலையில் இரு குடும்பத்தினரிடையேயும் சொத்து குறித்து நேற்று முன்தினமும் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்படவே, இதனை தீர்த்து வைக்க மீண்டும் ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆயுதங்களால் தாக்குதல்

இந்த பஞ்சாயத்துக்கு ரேவணசித்தப்பாவின் குடும்பத்தினர் மற்றும் அப்பு கவுடாவின் குடும்பத்தினரும் நேற்று வந்துள்ளனர். இரு தரப்பு பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருந்தது.

அப்போது அப்புகவுடா மற்றும் அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை ரேவணசித்தப்பாவும், அவரது குடும்பத்தினரும் ஏற்கவில்லை.

இதனால் அங்கு இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதனால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

இதில் கடும் கோபமும், ஆத்திரமும் அடைந்த அப்புகவுடாவும், அவரது தரப்பினரும் ஏற்கனவே திட்டம் தீட்டியபடி தாங்கள் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் ரேவண சித்தப்பா மற்றும் அவரது தரப்பினரை தாக்கினர். அரிவாளால் வெட்டியும், கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர். மேலும் துப்பாக்கியாலும் அவர்களை நோக்கி சுட்டனர்.

6 பேர் கொலை

இதில் ரேவணசித்தப்பாவின் குடும்பத்தினரான துண்டப்பா(வயது 65), சிவபுத்ரா(58), சந்திரகாந்த்(55), சிவபுத்ராவின் மகன்கள் ராகுல்(25), சமர்த்(23) மற்றும் தோட்ட வேலைக்காரன் சபீர் பாபுசாப்(45) ஆகிய 6 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் அரவிந்த் யஷ் வந்த்(72) மற்றும் சந்தீப் பாரத் மானே(33) ஆகிய 2 பேரும் துப்பாக்கி குண்டு பாய்ந்தும், அரிவாளால் வெட்டப்பட்டும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை ஓட விரட்டியும், தாக்கியும் கொடூரமாக கொலை செய்துவிட்டு அப்பு கவுடாவும், அவரது குடும்பத்தின ரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

5 பேருக்கு வலைவீச்சு

பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்புகவுடா தரப்பைச் சேர்ந்த சசிகாந்த், பிரசாந்த், ரமேஷ், சங்கப்பா, மகாதேவா ஆகிய 5 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

காயம் அடைந்த 2 பேரும் மாவட்ட அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.