புது டெல்லி:
காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நேற்று குற்றம் சாட்டினார். அவர் அதிகாரப்பூர்வ புகார் எதுவும் அளிக்காத நிலையில், மத்திய அரசே தன்னிச்சையாக இந்த குற்றச்சாட்டை விசாரிக்க முன் வந்துள்ளது. மத்திய அரசின் எலக்ட்ரானிக் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கீழ் வரும், சைபர் கிரைம் தடுப்பு பிரிவான சி.இ.ஆர்.டி இந்த குற்றச்சாட்டை விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சி.இ.ஆர்.டியிடம் உள்ள அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் ஹேக்கர்களையும், சைபர் தாக்குதல்களையும் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு பெகாசஸ் மென்பொருள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களின் செல்போன்களை சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இப்போது தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் மத்திய அரசு தான் ஹேக் செய்துள்ளதாகவும், போனில் ஒட்டுக்கேட்பதும், ஹேக் செய்வதையும் தவிர மத்திய அரசுக்கு வேறு வேலை கிடையாதா என பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.