இந்தியா

இரவு நேரத்தில் பேருந்தில் சென்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி: போர்வைகளை வைத்து சிறிய அறையை உருவாக்கிய ஓட்டுநர்

தனியார் பேருந்து காட்டுப்பகுதிக்குள் சென்று கொண்டிருந்ததால், அருகில் மருத்துவமனை வசதி எதுவும் இல்லாமல் இருந்தது.

அசாமில் தனியார் சொகுசு பேருந்து ஒன்றில் இரவு நேரத்தில் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு பேருந்திற்கு உள்ளேயே பிரசவம் பார்க்கப்பட்டது.

அசாம் மாநிலம் குவஹாட்டி பகுதியில் இருந்து திப்ருகர் நோக்கி இரவு நேரத்தில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தில் தனது குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேருடன் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பயணம் செய்தார்.

அப்போது அந்த பேருந்து காட்டுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, அந்த கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

மருத்துவமனை வசதி இல்லாத பகுதி

அந்த சமயத்தில் பேருந்து காட்டுப்பகுதிக்குள் சென்று கொண்டிருந்ததால், அருகில் மருத்துவமனை வசதி எதுவும் இல்லாமல் இருந்தது.

இதைத்தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் அவசர எண் சேவையை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பேருந்தில் பிரசவம்

ஆம்புலன்ஸ் வருவதற்கு காலதாமதம் ஆனதால் வேறு வழியில்லாமல் பேருந்தின் உள்ளேயே கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க முடிவு செய்யப்பட்டது.

அப்போது பேருந்தில் இருந்த ஆண் பயணிகளை கீழே இறங்குமாறு பெண்கள் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பேருந்தில் இருந்த போர்வை மற்றும் துணிகளை வைத்து, பேருந்தின் உள்ளே ஒரு சிறிய அறையை உருவாக்கினர்.

இதைத்தொடர்ந்து பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு, பேருந்தின் உள்ளேயே பெண்கள் பிரசவம் பார்த்தனர்.

பெண் குழந்தை

இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு முன்பு, கர்ப்பிணிக்கு பெண் குழந்தை ஒன்று சுகப்பிரசவமாக பிறந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு காலதாமதாக வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், தாயையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

தாய் சேய் நலம்

இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாய் மற்றும் பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் தனது பேருந்தில் பிறந்த பெண் குழந்தைக்கு பேருந்து ஓட்டுநர் ரூபாய் 5,000 வழங்கினார்.

ஓட்டுநருக்கு பாராட்டு

இதையடுத்து தாய் சேய் இருவரையும் காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் பேருந்து உதவியாளருக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் துரிதமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநரின் செயல் இணையத்தில் பயனர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT