‘அரசியல் பிரமுகர்களைக் குறிவைத்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள், நையாண்டிகள், கேலிச்சித்திரங்கள் விரும்பத்தகாதவை என்பதற்காக மட்டுமே அவற்றைக் கட்டுப்படுத்த முடியாது’ என ராகவ் சதாவின் ஆளுமை உரிமை மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சதா, கட்சித் தலைமையுடனான கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்ததால் பல்வேறு விமர்சனங்களை சதா எதிர்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி பாஜக எம்பி ராகவ் சதா டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், ராகவ் சதாவிற்கு இடைக்கால நிவாரணம் வழங்க மறுத்து தீர்ப்பை ஒத்திவைத்துள்ளார்.
வழக்கு விசாரணையின்போது பேசிய நீதிபதி,
ராகவ் சதா பாஜகவில் இணைந்ததை விமர்சித்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவுகள், அரசியல் களத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீதான விமர்சனங்கள் மட்டுமே என்பதால், இதில் ஆளுமை உரிமைகள் மீறப்பட்டதற்கான முகாந்திரம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
அவதூறுக்கும், விமர்சனத்திற்கும் இடையே ஒரு மெல்லிய கோடுதான் உள்ளது. என் மனதில் ஏற்பட்ட முதல் எண்ணம் இதுதான். மேலோட்டமாகப் பார்க்கையில், ஆளுமை உரிமை மீறல் எதுவும் இல்லை.
அரசியல் களத்தில் நீங்கள் எடுத்த ஒரு முடிவு விமர்சிக்கப்படுகிறது. இது ஆளுமை உரிமைப் பிரச்சனை இல்லை என்பதால், தேவையெனில் ராகவ் சதா தனது மனுவை அவதூறு வழக்காக மாற்றித் தாக்கல் செய்யலாம் என்று கூறினார்.
மேலும் புகழ்பெற்ற கேலிச்சித்திரக் கலைஞர் ஆர்.கே.லட்சுமணனை குறிப்பிட்டு பேசிய நீதிபதி,
சுதந்திரம் அடைந்தது முதல் கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லக்ஷ்மனின் அரசியல் கார்ட்டூன்கள் மற்றும் நையாண்டிகளைப் பார்த்து நாம் வளர்ந்திருக்கிறோம். அன்று சமூக ஊடகங்கள் இல்லை, இன்று பரவியுள்ளன. அரசியல் களத்தில் விமர்சனங்கள் தவிர்க்க முடியாதவை என்று குறிப்பிட்டார்.
இதனிடையே ராகவ் சதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ராகவ் பணத்திற்காகச் சென்றதாக அவர்கள் கூறுகிறார்கள். இது நியாயமான விமர்சனமாக இருக்க முடியாது’ என வாதிட்டார்.
இதற்கு சமூக ஊடகங்களில் வரும் அரசியல் விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்கு ஒரு அரசியல் தலைவராக ராகவ் சதா இவ்வளவு உணர்ச்சிவசப்படக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.