ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் புலிக்கட்டா போர் ரோடு பஸ் நிறுத்தத்தில் பஸ்க்காக பயணிகள் காத்திருந்தனர். அப்போது விஜயவாடாவில் இருந்து கரகாட்ட நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது.
பயணிகள் பஸ்சை நிறுத்துமாறு கையில் சைகை செய்தனர். ஆனால் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றார்.
பஸ் நிறுத்தத்தில் இருந்த பெண் தனக்கு தெரிந்த ஒருவருடன் பைக்கில் பஸ்சை விரட்டிச் சென்றார். மோபி தேவி சுங்கச்சாவடி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சை நிறுத்துமாறு மீண்டும் பெண் சைகை செய்தார். டிரைவர் அப்போதும் பஸ்சை நிறுத்தவில்லை.
பஸ்சை விடாமல் 6 கிலோ மீட்டர் வரை பின் தொடர்ந்து சென்றார். சுப்பிரமணியேஸ்வரர் கோவில் நிறுத்தத்தில் பஸ் நின்றது.
பைக்கில் இருந்து இறங்கி சென்ற பெண் ஏன் 2 பஸ் நிறுத்தங்களில் நிறுத்துமாறு சைகை செய்தும் பஸ்சை நிறுத்தவில்லை என டிரைவரிடம் ஆவேசமாக சத்தம் போட்டார்.
பஸ் டிரைவர் தன்னை கேள்வி கேட்ட பெண்ணை ஆபாசமாக திட்டினார். இதனைக் கேட்டு ஆத்திரமடைந்த பெண் டிரைவரை அவரது இருக்கையில் இருந்து கீழே இழுத்தார்.
தனது காலில் இருந்த செருப்பை கழற்றி டிரைவரை சரமாரியாக தாக்கினார். அங்கிருந்த பயணிகள் இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
டிரைவரை செருப்பால் அடித்த பெண் போலீஸ்காரரின் மனைவி என்பதால் அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யாமல் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.