இந்தியா

ஆன்லைன் சூதாட்டத்தால் கொலைகாரனாக மாறிய போலீஸ்காரர்

பிரவீன் குமார் ரியல் எஸ்டேட் அதிபரிடம் வேறு நிலத்தை கொடுப்பதாக தெரிவித்தார்.

ஆந்திர மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், சின்ன கோடுரை சேர்ந்தவர் பிரவீன் குமார். போலீஸ்காரரான இவர் கடந்த 2007-ம் ஆண்டு வேலையில் சேர்ந்தார். மாவட்ட தலைமையகத்தில் உள்ள அதிரடிப்படை பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரஜிதா.

பிரவீன் குமாரும், ரஜிதாவும் கடந்த 2 ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ரூ.60 லட்சத்தை இழந்தனர். தம்பதிக்கு ரூ 30 லட்சம் கடன் ஏற்பட்டது. கடனை அடைக்க தம்பதியினர் குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்க முடிவு செய்தனர். பிரவின் குமார் தனது தம்பியின் நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர் விஸ்வநாதம் (வயது 57) என்பவரிடம் அடகு வைத்து ரூ.12 லட்சம் பணம் பெற்றார்.

கடனை திருப்பி தராததால் விஸ்வநாதம் நிலத்தை விற்பனை செய்வதாக தெரிவித்தார்.

அப்போது பிரவீன் குமார் ரியல் எஸ்டேட் அதிபரிடம் வேறு நிலத்தை கொடுப்பதாக தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலத்தை காண்பிப்பதாக கூறி தனது மனைவியுடன் சேர்ந்து விஸ்வநாதத்தை காரில் ஏற்றிக்கொண்டு மேட்டு பண்டலாவின் புறநகர் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றார்.

காரில் வைத்து கணவனும், மனைவியும் சேர்ந்து விஸ்வநாதம் கை, கால்களை கட்டி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். அவரது உடலில் இருந்த 10 பவுன் நகையை எடுத்துக் கொண்டனர்.

பிணத்தை இமாம் பாத் கால்வாயில் வீசிவிட்டு ஐதராபாத் தப்பிச்சென்றனர். ஐதராபாத் நகைக்கடையில் நகைகளை விற்று பணத்தைப் பெற்றுக் கொண்டனர்.

விஸ்வநாதம் வீட்டிற்கு வராததால் அவரது மனைவி வனிதா சின்ன கோடுர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விஸ்வநாதத்தை தேடி வந்தனர். நேற்று முன்தினம் இரவு போலீசார் விஸ்வநாதம் பிணத்தை கண்டுபிடித்தனர்.

அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர் அதில் பிரவீன் குமாரும், அவரது மனைவியும் சேர்ந்து காரில் விஸ்வநாதத்தை ஏற்றி சென்றது பதிவாகி இருந்தது. போலீசார் பிரவீன் குமார் அவரது மனைவியை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். போலீசார் இருவரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.