பெங்களூரு :
பெங்களூருவில் நேற்று போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க நாளை (அதாவது இன்று) முதல் இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தி உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த சந்தர்ப்பத்தில் இரவு 10 மணிக்கு பின்பு பெங்களூருவில் தேவையில்லாமல் சுற்றி திரிய யாருக்கும் அனுமதி கிடையாது.
இரவு ஊரடங்கு அமல்படுத்தி இருப்பதால், அந்த நேரத்தில் வெளியே செல்வதற்காக யாருக்கும் தனியாக எந்த விதமான அடையாள அட்டையும் வழங்கப்படாது. அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதாவது மருந்து வாங்க மெடிக்கல், உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரிக்கு செல்பவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
அதுபோல், இரவு நேரத்தில் பயணம் செய்யும் பொதுமக்கள் ரெயில், விமானம், பஸ் நிலையத்திற்கு சென்றால், அது தொடா்பாக டிக்கெட், பிற ஆவணங்களை போலீசாரிடம் காட்டி செல்லலாம். அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகள், வழிகாட்டு நெறிமுறைகள் பற்றி நகரில் உள்ள அனைத்து பப், பார்கள், ஓட்டல் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பப், பார்களின் உரிமையாளர்களுடன் ஆலோசனையும் நடத்தப்படும்.
அரசின் உத்தரவை அமல்படுத்தி, செயல்படுத்துவது தான் போலீசாரின் கடமையாகும். அதனால் அரசின் உத்தரவை ஒவ்வொரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இரவு நேர ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதில், எந்த விதமான பாரபட்சமும் பார்க்கப்படாது.
பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி யாராவது கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, இந்திராநகர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நகரில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர். எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச்தெருவில் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது. பெங்களூருவில் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாடுவதற்கு அனுமதி இல்லை.
தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதாலும், இரவு 10 மணிக்கு பின்பு புத்தாண்டு கொண்டாடுவதற்காக தேயைில்லாமல் சுற்றி திரிந்தால், அவர்கள் மீது என்.டி.எம்.ஏ. சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்படும்.
புத்தாண்டையொட்டி இரவு 10 மணிக்கு மேல் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யும் நபர்களை கண்காணிக்கும் பணியில் கலால் துறையினர் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு கமல்பந்த் கூறினார்.