POK  
இந்தியா

POK தேர்தல் வெறும் நாடகம்.. 90 பேர் இறந்திருக்கிறார்கள்.. மனித உரிமை மீறலுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் - இந்தியா

மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தானைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் தேர்தல் மற்றும் போராட்டங்களால் நிலவும் அசாதாரண சூழல் குறித்து இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.

நாடகம்

நேற்று செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்படும் சட்டப்பேரவைத் தேர்தல் முழுக்க முழுக்க ஒரு போலி நாடகம்.

கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தான் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களில் குறைந்தது 90 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

மக்களின் நியாயமான எதிர்ப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு துப்பாக்கிச் சூடு, இணைய சேவை முடக்கம், மிரட்டல் மற்றும் வன்முறை மூலமே பதிலளித்து வருகிறது.

பாகிஸ்தானின் மனித உரிமைப் போதனைகளின் போலித்தனத்தை சர்வதேச சமூகம் உணர்ந்து, அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தானைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீரின் 35 சதவீத நிலம் பாகிஸ்தான் வசம் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) என அழைக்கப்படும் இந்த பகுதிக்கு தனி ஜனாதிபதி, பிரதமர், சட்டசபை உள்ளது.

இங்கு மக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறை, உரிமைகள் மறுப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் பெருமளவில் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.

தேர்தல்

பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜூலை 27 முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி (JAAC) என்ற அமைப்பு மக்களை தேர்தலை புறக்கணிக்கச் செய்து போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

மூன்று கட்டங்களாக நடைபெற்று வரும் சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவை பெருமபாலான மக்கள் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.