உமர் அப்துல்லா
இந்தியா

மாநில அந்தஸ்தை பறிக்காமல் இருந்திருந்தால், PoK மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணைய கிளர்ந்து எழுந்திருப்பார்கள்- உமர் அப்துல்லா

PoK-ல் நிலவும் சூழலைக் கண்டு நான் வேதனை அடைகிறேன் என்றார் உமர் அப்துல்லா.

ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநில அந்தஸ்து பறிக்கப்படாமல் இருந்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் இணையக் கிளர்ந்தெழுந்திருப்பார்கள் என்று அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் உமர் அப்துல்லா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

1947-ல் பாகிஸ்தானிலிருந்து வந்த பழங்குடியின ஊடுருவல்காரர்களை எதிர்த்துப் போராடி, இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க தீர்மானித்த காஷ்மீர் மக்களின் முடிவை PoK-ல் நிலவும் தற்போதைய சூழல் நியாயப்படுத்தியுள்ளது. ஜனநாயக உரிமைகளைக் கோரியதற்காக பலர் கொல்லப்பட்டும், ஏராளமானோர் காயமடைந்தும், சிறையில் அடைக்கப்பட்டும் உள்ள PoK-ன் நிலைமை தனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து

எல்லையின் மறுபுறம் நிலவும் சூழலைப் பார்க்கும்போது, ​​ஹம்லாவர் கபர்தார், ஹம் காஷ்மீரி ஹைன் தயார் (தாக்குதல் நடத்துபவர்களே எச்சரிக்கை, நாங்கள் காஷ்மீரிகள் தயாராக இருக்கிறோம்) என்று கூறிய நமது முன்னோர்கள் சொன்னது சரிதான் என்பதை நான் உணர்கிறேன்.

PoK-ல் நிலவும் சூழலைக் கண்டு நான் வேதனை அடைகிறேன். 2019-ல் ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால், இன்று PoK மக்கள் ஜம்மு-காஷ்மீருடன் மீண்டும் இணைவதற்காகக் கிளர்ந்தெழுந்திருப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

என்றாவது ஒரு நாள் அந்த இடங்கள் நிரப்பப்படும் என்ற நம்பிக்கையில், சட்டப்பேரவையில் அந்தப் பகுதிக்கான இடங்களை நாங்கள் காலியாக வைத்துள்ளோம்.

மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பு ரீதியான உத்தரவாதங்களை மீட்டெடுப்பதற்கும், ஜம்மு-காஷ்மீரை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கும் எங்கள் அரசு உறுதியுடன் உள்ளது. இந்த இலக்குகளை நிறைவேற்ற நாங்கள் பாடுபடுவோம்

இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார்.

முன்னதாக, 1947-ல் இந்திய ராணுவம் காஷ்மீருக்கு வருவதற்கு முன்பே, பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களை எதிர்த்துப் போராடவும் தங்கள் தாயகத்தைக் காக்கவும் காஷ்மீர் மக்களுக்குத் தலைமை தாங்கிய தனது தாத்தாவும், ஜம்மு-காஷ்மீரின் முதல் பிரதமருமான ஷேக் முகமது அப்துல்லாவுக்கு உமர்அப்துல்லா அஞ்சலி செலுத்தினார்.

இதற்கிடையே உமர் அப்துல்லாவின் கருத்துகள் பொறுப்பற்றவை என்று கூறி பாஜக பதிலடி கொடுத்தது.

"இது முதல்வரின் பொறுப்பற்ற பேச்சு. நமது தேசியக் கொடியைக் கொண்டாடும் இந்தத் தேசிய நாளில் அவர் அரசியல் செய்கிறார். தனது செயல்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேச இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் இதை அரசியலுக்காகப் பயன்படுத்திக்கொண்டார்." என்று ஜம்மு- காஷ்மீர் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுனில் சர்மா கூறினார்.