இந்தியா

நிதி ஆயோக் கூட்டம்: நாட்டின் வளர்ச்சிக்காக இணைந்து செயல்படுகிறோம் - பிரதமர் மோடி உறுதி

அனைவருக்கும் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, நல்வாழ்வு மற்றும் சமத்துவமான சமூக நீதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

நிதி ஆயோக் கவுன்சில் என்பது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கும் உயர்ந்த அமைப்பாகும். இது இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை வடிவமைப்பதிலும், மாநிலங்களின் பங்களிப்பை உறுதி செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நிதி ஆயோக்

இந்தியாவில் 65 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த திட்டக்கமிஷனுக்கு மாற்றாக இது கொண்டு வரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் 2015-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி நிதி ஆயோக் முறைப்படி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் நிதி ஆயோக் கவுன்சிலின் 11-வது கூட்டம் டெல்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதை ஏற்று ஒவ்வொரு மாநில முதல்-மந்திரிகளும் இன்று நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் விஜய் நேற்றே டெல்லி சென்றிருந்தார். அங்கு அவர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்தார்.இன்று காலையில் முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டு நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்ற ஜனாதிபதி மாளிகைக்கு காலை 9 மணிக்கு சென்றடைந்தார்.

அவருடன் தமிழக அரசின் தலைமை செயலாளர் சாய்குமாரும் சென்றார். அங்கு மத்திய அரசின் உயர் அதிகாரிகள் அவர்களை வரவேற்று கூட்ட அரங்கில் அமர வைத்தனர்.

கூட்டம் தொடங்கியது

காலை 9.30 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் தொடங்கியது.

இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் விஜய், ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி வி.டி.சதீசன், தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி, கர்நாடகா முதல்-மந்திரி டி.கே.சிவகுமார், டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, பீகார் முதல்-மந்திரி சாம்ராட் சவுத்ரி, உத்தர பிரதேச முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், மராட்டிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சைனி, அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா, திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சகா, சிக்கிம் முதல்-மந்திரி பிரேம்சிங் தமாங், காஷ்மீர் முதல்-மந்திரி உமர் அப்துல்லா, ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மத்திய மந்திரிகள்

மேலும் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், துணை நிலை ஆளுனர்கள், அரசு உயர் அதிகாரிகள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு ‘2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற கருப்பொருளில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.

மாநிலங்களில் வளர்ச்சி திட்டங்கள்

கூட்டம் தொடங்கியதும் பிரதமர் மோடி வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மேம்பாட்டுக்கான அணுகுமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அடிப்படை கல்வி, எதிர்கால திறன் மேம்பாடு, தொழில் முனைவு மற்றும் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அனைவருக்கும் ஆரோக்கியம், ஊட்டச்சத்து, நல்வாழ்வு மற்றும் சமத்துவமான சமூக நீதி ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் தரவு சார்ந்த நிர்வாக முறைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்தும் திட்டமிடப்படுகிறது. மேலும் மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களை தேசிய அளவிலான இலக்குகளுடன் இணைப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

முதல்-மந்திரிகள்

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநில முதல்-மந்திரிகளும் அகர வரிசைப்படி பேச அழைக்கப்பட்டனர். அந்த வகையில் காலையில் ஆந்திரா, அசாம், பீகார், டெல்லி, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதல்- மந்திரிகள் பேசினார்கள்.

அவர்கள் தங்களது மாநிலங்களுக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களுக்கு போதுமான நிதி வழங்குமாறு வலியுறுத்தினார்கள்.

வலைதள பதிவு

நிதி ஆயோக் கூட்டம் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

11-வது நிதி ஆயோக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன். கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை விரைவுபடுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம்.

வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த நமது பொதுவான தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் கூட்டு முயற்சிகள் முக்கிய பங்காற்றும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.