இந்தியா

சோமநாதர் கோவில் 75-வது ஆண்டு நிறைவு விழா: பிரதமர் மோடி பங்கேற்கிறார்

சோமநாத் வெறும் ஒரு கோவில் மட்டுமல்ல, அது நமது நாகரிகத்தின் அசைக்க முடியாத உறுதியின் சின்னம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

புகழ்பெற்ற பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களில் முதன்மையானது சோமநாதர் கோவில். இது மேற்கு கடற்கரையோரம் குஜராத் மாநிலம் வெராவல் பகுதியில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கோவில் முகலாய மன்னர்களால் பலமுறை சூறையாடப்பட்டது. வரலாற்றில் கஜினி முகமதுவின் படையெடுப்பில் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரியவருகிறது. கஜினி முகமது 17 முறை இதனை சூறையாடி இருக்கிறார்.

பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளான இந்த கோவில் தொடக்கத்தில் இருந்தே பலமுறை புனரமைக்கப்பட்டாலும் சுதந்திரத்துக்கு பிறகு புனரமைப்புப்பணி தொடங்கி 1951-ம் ஆண்டு திறப்புவிழா கண்டதை பெரிதாக கொள்கிறார்கள். இந்த புனரமைப்பின் 75-வது ஆண்டு நிறைவு விழா 11-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி, "சோமநாத்தும், பாரதத்தின் வெல்ல முடியாத மனோபலமும்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் இந்த கோவிலைப்பற்றிய பல்வேறு தகவல்களை குறிப்பிட்டு இருக்கிறார்.

சோமநாத் வெறும் ஒரு கோவில் மட்டுமல்ல, அது நமது நாகரிகத்தின் அசைக்க முடியாத உறுதியின் சின்னம் என்று அவர் கூறியுள்ளார்.

சர்தார் வல்லபாய் படேல்தான் கடந்த 1947-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த கோவில் மீண்டும் புத்துயிர்பெற காரணமாக இருந்தவர். இவரது முயற்சியால் கட்டப்பட்ட கோவிலை, அவரது மறைவுக்கு பிறகு அப்போதைய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் 1951-ம் ஆண்டு மே மாதம் 11-ந்தேதி திறந்து வைத்தார்.

இதனை கட்டுரையில் குறிப்பிட்டுள்ள மோடி, 75 ஆண்டுகளுக்குப் பிறகு அதே தினத்தில் அங்கே செல்கிறார்.

"நாட்டு மக்கள் அனைவரும் புனிதமான சோமநாதர் கோவிலுக்குச் சென்று அதன் மகத்துவத்தைக் காணுமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் சோமநாதர் நதிக்கரையில் நிற்கும்போது, அதன் தொன்மையான எதிரொலிகளை உங்களுக்குள் உணர்வீர்கள், அங்கே, நீங்கள் பக்தியை மட்டுமல்ல. ஒருபோதும் ஓயாத, அதன் தீவிரம் குறையாத ஒரு நாகரிக உணர்வின் சக்திவாய்ந்த துடிப்பையும் அனுபவிப்பீர்கள். அங்கே. ஒவ்வொரு பின்னடைவையும் மீறி தனது அடையாளத்தையும், கலாசாரத்தையும் சிதைக்காமல் பேணிவரும் பாரதத்தின் அசைக்க முடியாத மனஉறுதியை உணர்வீர்கள்" எனக்கூறி கட்டுரையை முடித்துள்ளார்.

பிரதமர் மோடி, சோமநாத் அறக்கட்டளையின் தலைவராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.