புது டெல்லி:
வரும் 12-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறவுள்ள தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் துவக்கி வைப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
வரும் 12-ம் தேதி, 25-வது தேசிய இளைஞர் திருவிழாவில் வீடியோ காணொளி மூலம் கலந்துக்கொள்ள உள்ளேன். நாடு முழுவதும் உள்ள என் நண்பர்களான இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்.
அந்த நிகழ்ச்சியில் நான் எதை குறித்து உரையாட வேண்டும் என்பது பற்றியும் நீங்கள் கருத்து தெரிவிக்க வேண்டும். இந்தியாவின் திறன் வாய்ந்த இளைஞர்களிடம் இருந்து கருத்துக்களை கேட்பதற்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
சமூக, கலாச்சார, அறிவுசார் ஒருங்கிணைவாக தேசிய இளைஞர் திருவிழா நடைபெற இருக்கிறது. நாடு முழுவதும் பல்வேறு கலாச்சாரத்தில் உள்ளவர்களை ஒருங்கிணைத்து ’ஒரே பாரதம், சிறந்த பாரதம்’ என்ற கருத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சியாக இது அமையப்போகிறது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக காணொளி மூலம் இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து ஜனவரி 13-ம் தேதி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சுற்றுச்சூழல், தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு, உள்நாட்டு ஞானம், தேசிய கட்டமைப்பு உள்ளிட்ட தலைப்புகளில் நம் நாடு சந்தித்துள்ள சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து இளைஞர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரியில் ரூ.122 கோடி முதலீட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளார்.