இந்தியா

பிஎம் கிசான் திட்டத்தின் 24-ஆவது தவணைத்தொகையை இன்று விடுவிக்கிறார் பிரதமர் மோடி

ஆண்டுக்கு ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக இன்று (அக். 30) குஜராத் செல்கிறார். அவர் அங்கு ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு, விவசாயிகளுக்கான பிஎம் கிசான் திட்டத்தின் 24-ஆவது தவணை தொகையையும் பிரதமர் மோடி இன்று விடுவிக்கிறார்.

பிஎம் கிசான் திட்டம்:

விவசாயிகளுக்கான பிஎம் கிசான் நிதி திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்தின்படி, சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ள விவசாய குடும்பங்களுக்கு உதவிதொகை வழங்கப்பட்டு வருகிறது. 4 மாதத்திற்கு ஒரு முறை தலா ரூ.2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி பணப்பரிமாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் இணைந்த விவசாயிகளுக்கு இதுவரை 23 தவணைகளாக 4.47 லட்சம் கோடி ரூபாய் வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது.

24-ஆவது தவணை:

இந்த நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் 24-ஆவது தவணை தொகை இன்று விடுவிக்கப்படுகிறது. குஜராத் மாநிலம் பில்டி நகரில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி பிஎம் கிசான் திட்ட பயனாளர்களான 9 கோடியே 34 லட்சம் விவசாயிகளுக்கு 24-ஆவது தவணத்தொகையாக தலா ரு. 2 ஆயிரம் விகிதம் மொத்தம் 18 ஆயிரத்து 680 கோடி ரூபாயை விடுவிக்கிறார்.

குறிப்பாக குஜராத் மாநிலத்தில் மட்டும் பிஎம் கிசான் திட்டத்தில் 52.33 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 1,051 கோடி விடுவிக்கப்பட உள்ளது.

பலத்த பாதுகாப்பு:

பிரதமர் மோடியின் குஜராத் பயணத்தின்போது எக்ஸ்பிரஸ் ரெயில் உள்பட 2 ரெயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அகமதாபாத் மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

இதனை தொடர்ந்து பயணத்தின் 2-ஆவது நாளான நாளை சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு அவர் மரியாதை செலுத்துகிறார். மேலும், வல்லபாய் பட்டேலின் 151-ஆவது பிறந்தநாளை ஒட்டி நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி குஜராத்த் மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT