இந்தியா

பென்டகனை மிஞ்சிய பிரமாண்டம்: சூரத் வைர பங்குச்சந்தையை டிச. 17ல் திறந்து வைக்கிறார் பிரதமர்

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது.சூரத் வைர பங்குச்சந்தையை டிசம்பர் 17-ம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி

அகமதாபாத்:

இந்தியாவின் வைரத் தொழில் தலைநகரமாக குஜராத்தின் சூரத் நகரம் திகழ்கிறது. உலகின் 90 சதவீத வைரங்கள் இங்கு பட்டை தீட்டப்படுவதாக கூறப்படுகிறது. வைரத்தை வெட்டுதல், பட்டை தீட்டுதல் மற்றும் வியாபாரத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து செயல்படும் விதமாக, 'சூரத் வைர பங்குச்சந்தை' என்ற மகா பெரிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

சூரத் வைர நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில், தலா 15 மாடிகளைக் கொண்ட 9 செவ்வக வடிவ அமைப்புகளாக இந்தக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலக கட்டிட வளாகத்தின் மொத்த தள பரப்பளவு 70 லட்சத்து 10 ஆயிரம் சதுர அடி ஆகும்.

டெல்லியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிறுவனமான மார்போஜெனிசிஸ் சுமார் 4 ஆண்டுகளில் இந்தக் கட்டிடத்தை கட்டி முடித்துள்ளது. இதற்கான மொத்த பட்ஜெட் ரூ.3 ஆயிரம் கோடி ஆகும்.

உலகிலேயே மிகப்பெரிய அலுவலக கட்டிடமாக இருந்த பென்டகனை, சூரத் வைர வர்த்தக மைய கட்டிடம் முந்தியுள்ளது.

இந்நிலையில், சூரத் வைர பங்குச்சந்தை அலுவலக கட்டிடத்தை டிசம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என

அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இங்குள்ள 4 ஆயிரத்து 700 அலுவலகங்களையும், கட்டுமானப் பணி தொடங்குவதற்கு முன்பே வைரத் தொழில் நிறுவனங்கள் வாங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.