இந்தியா

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரெயில்: நாளை மறுதினம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

ஹைட்ரஜன் ரெயிலை அறிமுகப்படுத்த மே மாதம் 22-ம் தேதி ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வகையிலான ரெயில் என்ஜினை தயாரிக்க கடந்த 2022-ம் ஆண்டு முயற்சிகள் தொடங்கின.

கடந்த 2020-21-ம் ஆண்டில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் வடக்கு மண்டல ரயில்வே இந்தத் திட்டத்தை 2022, ஏப்ரலில் தொடங்கியது. இந்தத் திட்டத்துக்கான டெண்டர் ஐதராபாத்தைச் சேர்ந்த மேதா என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம்தான் எரிபொருட்களை சப்ளை செய்கிறது.

ஹைட்ரஜன் ரெயிலை வடிவமைக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரெயில் பெட்டி தொழிற்சாலையில் நடைபெற்றன. பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து சோதனை ஓட்டங்களும் நடந்தன. இதையடுத்து, ரெயிலை அறிமுகப்படுத்த கடந்த மே மாதம் 22-ம் தேதி ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், ஹைட்ரஜன் ரெயிலின் அறிமுகம் வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. மின்மயம் ஆக்கப்படாத வழித்தடமான அரியானா மாநிலத்தின் ஜிந்த் நகரில் இருந்து சோனிபட்டுக்கு இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் முதன்முதலாக உலகின் முதல் ஹைட்ரஜன் பயணிகள் ரெயில் 2018-ம் ஆண்டில் இயக்கப்பட்டது. அதன்பின் ஜப்பான், சீனா, அமெரிக்கா ஆகியவை தங்கள் நாட்டுகளில் தயாரிக்கப்பட்ட ஹைட்ரஜன் ரெயிலை இயக்கின என்பது குறிப்பிடத்தக்கது.