கிராமப்புற பெண்களால் அதிநவீன தொழில்நுட்பங்களை கையாள முடியாது என்ற பழைய நம்பிக்கையை தகர்த்தெறிந்து, இன்று அவர்களே வயல்வெளிகளில் தொழில்நுட்ப புரட்சியை நிகழ்த்தி வருகின்றனர்.
மத்திய அரசின் 'நமோ டிரோன் டிஐடிஐ' திட்டம் விவசாய முறைகளை நவீனமயமாக்குவதுடன், கிராமத்து பெண்களின் சமூக அந்தஸ்தையும் உயர்த்தி அவர்களுக்கு புதிய அடையாளத்தை பெற்று தந்துள்ளது.
புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் தனியார் குழுமத்தின் சார்பில் 2 நாட்கள் நடைபெற்ற பாரத் வேளாண் மாநாடு மற்றும் கிசான் தக் மாநாட்டின் நிறைவு விழா நடைபெற்றது.
இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நமோ டிரோன் டிஐடிஐ., திட்டத்தின் மூலம் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சாதாரண பெண் ஒருவர் ‘பைலட் பாபி' என்ற அந்தஸ்துக்கு உயர்ந்த நெகிழ்ச்சியான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு டிரோன் சகோதரியுடன் தான் உரையா டியதை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். அந்த பெண் பிரதமரிடம் தனது வாழ்க்கை மற்றும் சமூக அந்தஸ்து முற்றிலும் மாறிவிட்டதாக பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணத்தை பிரதமர் கேட்டபோது, டிரோன் இயக்க கற்றுக்கொண்ட பிறகு ஒட்டுமொத்த கிராமமும் தன்னை இப்போது 'பைலட்' என்றே அழைப்பதாகவும், தனது மைத்துனர்கள் கூட தன்னை 'பைலட் பாபி' (பைலட் அண்ணி) என்று மரியாதையுடன் அழைப்பதாகவும் அந்த பெண் மகிழ்ச்சியுடன் கூறினார்.
கிராமப்புற பெண்களுக்கு வாழ்வாதாரத்தை உருவாக்கி தரும் நோக்கில், கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.1,261 கோடி மதிப்பீட்டில் நமோ டிரோன் டிஐடிஐ., திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
2023-24 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 15 ஆயிரம் விவசாய டிரோன்களை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ் டிரோன் தொகுப்பு விலையில் 80 சதவீதம், அதாவது அதிகபட்சமாக ரூ.8 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் 15 நாட்கள் டிரோன் பைலட் பயிற்சியும், 5 நாட்கள் உதவியாளர் பயிற்சியும் அரசால் அளிக்கப்படுகிறது.
கடந்த 2026 பிப்ரவரி மாதம் வெளியான வேளாண் அமைச்சக அறிக்கையின்படி, அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 500 டிரோன்கள் உள்பட மொத்தம் 1,094 டிரோன்கள் உர நிறுவனங்கள் மூலம் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பெண்கள் இன்று விவசாய சேவை வழங்குநர்களாக மாறி லட்சங்களில் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த நீது சிங், பயிர்களுக்கு மருந்து தெளிப்பதன் மூலம் தினமும் ரூ.2 ஆயிரம் வரை சம்பாதிப்பதுடன் 2 உதவியாளர்களுக்கும் வேலை கொடுத்துள்ளார்.
அதே மாநிலம் கோரக்பூரை சேர்ந்த நீது பஸ்வான் மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வருமானம் ஈட்டுகிறார்.
மத்திய பிரதேசத்தின் சம்பல் பகுதியை சேர்ந்த சுனிதா ஷர்மா, குஷ்பூ லோதி ஆகியோர் டிரோன் மூலம் உரம் தெளித்து தனி அங்கீகாரம் பெற்றுள்ளனர்.
ஹரியானாவை சேர்ந்த ஷர்மிளா யாதவ் தனது விமானி கனவை விவசாய டிரோன் மூலம் நனவாக்கியுள்ளார். பீகார் மாநிலம் பக்ஸாரை சேர்ந்த சம்பா தேவி, முன்பு கணவரின் பெயரால் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்று கிராம மக்களால் 'டிரோன் பைலட்' என்ற சொந்த அடையாளத்துடன் அழைக்கப்படுகிறார்.
இவ்வாறு நவீன தொழில்நுட்பம் கிராமத்து பெண்களின் பொருளாதாரத்தை மட்டுமல்ல, அவர்களின் சுயமரியாதையையும் உயர்த்தியுள்ளது.