இந்தியா

PM Modi | ஈரான் போரால் எரிபொருள் பிரச்சினை... பாதிப்புகளை குறைக்க நடவடிக்கை - பிரதமர் மோடி

கச்சா எண்ணெய்க்கு மாற்றாக எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை.

மாலை மலர்

மேற்காசிய போரால் நாட்டில் கியாஸ் சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. எரிபொருள் நெருக்கடி தொடர்பாக பிரதமர் மோடி நேற்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தடையற்ற வினியோகத்தை உறுதி செய்ய அவர் அறிவுறுத்தினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் மேற்காசிய போரால் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக பேசினார். அப்போது அவர், "மேற்காசியாவின் நிலைமை கவலை தரக்கூடியதாக இருக்கிறது. மேற்காசிய போரால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்காசிய நாடுகளுடன் இந்தியாவுக்கு மிகவும் ஆழமான வர்த்தக உறவு இருக்கிறது. இந்தியாவின் எரிசக்தி தேவைக்கு மேற்காசிய நாடுகள் மிகவும் அவசியம்.

முன் எப்போதும் சந்திக்காத அளவுக்கு இந்தியா சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. மேற்காசிய நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் வர்த்தகத்திற்கு மேற்காசிய நாடுகள் முக்கிய வழித்தடமாக இருக்கின்றன. இந்தியாவில் கச்சா எண்ணெய், எல்.பி.ஜி. விநியோகம் பாதிப்பை சந்தித்து இருக்கிறது. எரிபொருள் பிரச்சினையால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

ஹார்முஸ் நீரிணை வழியாக வர்த்தகம் செய்வது தற்போது சிக்கலை சந்தித்து இருக்கிறது. ஹார்முஸ் நீரிணை வழியாகத் தான் எரிபொருள், கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறுகிறது. 41 நாடுகளில் தற்போது எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. வீட்டு உபயோக எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதே தற்போது முன்னுரிமை. கச்சா எண்ணெய்க்கு மாற்றாக எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ரெயில் சேவை மின் மயமாக்கப்பட்டு இருப்பதால் பெருமளவு எரிசக்தி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்டுக் கொண்டுவர முயற்சி செய்யப்படுகிறது," என்றார்.