வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி வீட்டில் தங்கி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தீபாவளி கொண்டாடினர். இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவி வருவதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், வறட்சியால் வாடும் விவசாயிகளுக்கு தைரியம் அளிக்கவும், அவர்களின் மன உறுதியை அதிகரிக்கவும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் மாவட்டம் நர்கேட் தாலுகாவில் உள்ள லோகாரி சவங்கா கிராமத்து விவசாயிகளுடன் இணைந்து இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். மேலும் அவர்களது வீட்டிலேயே நேற்று முன்தினம் இரவு தங்கினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், மகாராஷ்டிரா முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூர் மாவட்டம் லோகாரி சவாங்கா கிராமத் தில் உள்ள அருணாபாய் மற்றும் ராம்பாவ் பால்பாண்டே ஆகிய விவசாயிகளின் இல்லத்தில் இரவு தங்கி, அவர்களுடன் தீபாவளியை கொண்டாடியது எனது இதயத்தை தொட்டுவிட்டது. மகாராஷ்டிராவில் உள்ள பா.ஜ.க. கூட்டணி அரசு விவசாயிகள் நலனுக்காக எவ்வளவு இரக்கத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுகிறது என்பதை இந்த நடவடிக்கை உணர்த்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.