பிரதமர் மோடி
இந்தியா

கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள்: ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் பேச்சு

சவால்களைப் பார்த்து அஞ்சாமல், அவற்றை வாய்ப்புகளாக மாற்றி, புதிய பாதைகளை உருவாக்குவதே Gen-Z இளைஞர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.

டெல்லி IIT-யின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

இன்றைய இளைஞர்கள் சவால்களைக் கண்டு பின்வாங்காமல், அவற்றுக்கான தீர்வுகளைத் தேடும் துணிச்சலை வளர்த்துக்கொள்ள வேண்டும் இளைஞர்களின் புதுமையான சிந்தனையும் தொழில்நுட்ப அறிவும் இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கியமானவை.

இளைஞர்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும்

சிக்கல்கள் வரும்போது, இது முடியாது என்று கூறுவதற்குப் பதிலாக, இதை எப்படிச் செய்ய முடியும்? என்ற கேள்வியை இளைஞர்கள் எழுப்ப வேண்டும். தோல்வி குறித்த பயத்தைத் தாண்டி புதிய முயற்சிகளை மேற்கொள்வதும், தேவையான இடங்களில் ஆபத்தை ஏற்றுக்கொள்வதும் வெற்றிக்கான முக்கியப் பாதைகள் என அவர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய Gen-Z தலைமுறை செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, செமிகண்டக்டர், பசுமை எரிசக்தி, டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும். குறிப்பாக, சமூகத்தின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தொழில்நுட்பம் மற்றும் புதுமை மூலம் தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடம் வளர்க்க வேண்டும்.

Gen Z இளைஞர்கள் சவால்களைப் பார்த்து அஞ்சக்கூடாது

கல்வி என்பது வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான கருவியாக மட்டும் இருக்கக் கூடாது. புதிய சிந்தனைகளை உருவாக்கி, நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் திறனை வளர்க்கும் அடித்தளமாக இருக்க வேண்டும். இந்தியாவின் இளம் தலைமுறையிடம் நம்பிக்கை இருப்பதாகக் கூறிய பிரதமர், அவர்களின் துணிச்சல், நம்பிக்கை மற்றும் புதுமை ஆகியவை நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என தெரிவித்துள்ளார்.

எனவே, சவால்களைப் பார்த்து அஞ்சாமல், அவற்றை வாய்ப்புகளாக மாற்றி, புதிய பாதைகளை உருவாக்குவதே Gen-Z இளைஞர்களின் மிகப்பெரிய பொறுப்பாகும்.

கேள்வி மட்டும் கேட்காதீர்கள், விடையைக் கண்டறியுங்கள். இந்தியாவின் ஸ்டார்ட்அப் (தொடக்கநிலை நிறுவனங்கள்) புரட்சியை வடிவமைத்து, அதற்கு வலுசேர்த்தவர்கள் உங்களைப் போன்ற, இதே தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்கள்தான்.

சிப்கள் முதல் கப்பல்கள் வரை

ஒரு தனி நிறுவனமே இவ்வளவு சாதனைகளைச் செய்ய முடியுமென்றால், நாடு முழுவதும் உருவாக்கப்பட்டு வரும் அந்த மாபெரும் சக்தியைச் சற்றே கற்பனை செய்து பாருங்கள்.

சிப்புகள் முதல் கப்பல்கள் வரை அனைத்தும் உங்கள் கைகளால் இங்கேயே தயாரிக்கப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.