நாடு முழுவதும் மேம்படுத்தப்பட்ட 75 ரெயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில், தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட சென்னை பூங்கா ரெயில் நிலையத்தை காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார்.
மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏற்கனவே 261 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக மேலும் 75 ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.
அதிநவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள இந்த 75 ரெயில் நிலையங்களையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பத்தார்.
இந்த 75 ரெயில் நிலையங்களில் தமிழகத்தை சேர்ந்த 3 ரெயில் நிலையங்களும் இடம்பெற்றுள்ளன. சென்னை பூங்கா, சின்ன சேலம், குன்னூர் ஆகிய ரெயில் நிலையங்களும் புதுப்பொலிவுடன் இன்று திறக்கப்பட்டுள்ளன.
பயணிகளுக்கான வசதியை மேம்படுத்தும் வகையிலும், அடுத்த 40 முதல் 50 ஆண்டுகால தேவையை நிறைவு செய்யும் வகையிலும் இந்த ரெயில் நிலையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பயணிகள் வசதியை மேம்படுத்தும் வகையில், ரூ.14.79 கோடி செலவில் சென்னை பூங்கா ரெயில் நிலையம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சின்ன சேலம் ரெயில் நிலையம் ரூ.15.14 கோடியிலும், குன்னூர் ரெயில் நிலையம் ரூ.12.18 கோடியிலும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு உள்ளன. கேரளாவில் 9 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இன்று பிற்பகலில் நடைபெற்ற விழாவில் சென்னை பூங்கா, சின்னசேலம், குன்னூர் உள்ளிட்ட 75 மறுசீரமைக் கப்பட்ட ரெயில் நிலையங்களையும் பிரதமர் மோடி காணொளி மூலம் திறந்து வைத்தார்.
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான நீலகிரி மலை ரெயில் பாதை கடந்த 1899-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த ரெயில் நிலையம் அங்கு வரும் பயணிகளின் ஈர்ப்பு மையமாக உள்ளது. குன்னூர் ரெயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
குன்னூர் ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் ஆர்ச், செல்பி ஸ்பாட், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது. ரெயில் நிலைய வளாக சுவர்களில் நீலகிரி மாவட்டத்தின் இயற்கை சூழலை பிரதிபலிக்கும் வகையில், பறவைகள், வன விலங்குகளின் ஓவியங்கள் தீட்டப்பட்டு, ஒட்டுமொத்த ரெயில் நிலையமும் தற்போது வன விலங்குகள் சரணாலயம் போன்று ரம்மியமாக காட்சி அளிக்கிறது.