இந்தியா

ஏழை மக்களின் நலனே அரசின் மையக் கொள்கை-12 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி பெருமிதம்!

"இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்டார்."

பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக ஊடகப் பக்கத்தில் #12YearsOfGaribKalyan என்ற ஹேஷ்டேக்குடன் இந்த மைல்கல்லைப் பகிர்ந்துள்ளார். கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா பல பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளதாகவும், அந்த மாற்றங்களின் மையப்புள்ளியாக ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனே இருந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல தசாப்தங்களாக நாட்டின் வளர்ச்சி பலன்களைப் பெறாமல் விளிம்பு நிலையில் இருந்த மக்களுக்கு அனைத்து உதவிகளும் நேரடியாகக் கிடைப்பதை இந்த அரசு உறுதி செய்துள்ளது. குறிப்பாக விவசாயிகளுக்கான PM-KISAN திட்டம், ஏழைகளுக்கான இலவச உணவு தானிய திட்டம், இலவச மருத்துவக் காப்பீடு, வீடமைப்பு, குடிநீர், சுகாதார பாதுகாப்பு மற்றும் பெண்கள் முன்னேற்ற திட்டங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளதாகவும், டிஜிட்டல் தளங்கள் மற்றும் நேரடிப் பலன் பரிமாற்றம் மூலமாக ஏழை மக்களுக்கான நிதியுதவி எவ்வித முறைகேடுகளும், கசிவுகளும் இன்றி, வெளிப்படைத் தன்மையுடன் பயனாளர்களைச் சென்றடைகிறது. இது நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை பலப்படுத்தியுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மேலும், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகவும், டிஜிட்டல் இந்தியா, உள்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் நலத்திட்டங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். “வளர்ந்த இந்தியா” என்ற இலக்கை நோக்கி அரசு தொடர்ந்து முன்னேறும் என்றும், மக்களின் வாழ்க்கையில் மேலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் இடையறாது செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

மத்தியில் பிரதமர் மோடி முதன்முதலில் மே.26, 2014 அன்று பிரதமராகப் பதவியேற்றார். தற்போது, அவரது மூன்றாவது பதவிக்காலம் (NDA3.0) வெற்றிகரமாகத் தொடர்கிறது. 12 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து ஒரு மாத கால நாடு தழுவிய பிரசாரத்தை தொடங்கியுள்ளன. இந்த பிரசாரத்தில் பாதுகாப்பு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உர உற்பத்தி மற்றும் உள்நாட்டு-வெளிநாட்டுப் பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளில் அடைந்த 'ஆத்மநிர்பர் பாரத்' சாதனைகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படவுள்ளன.

"ஏழைகளின் நலனை மேம்படுத்தும் இந்த 12 ஆண்டுகாலப் பயணம், தற்போது ஒட்டுமொத்த மனித ஆற்றல் மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு மக்கள் இயக்கமாக மாறியுள்ளது. இது 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற நம் கனவை நனவாக்க வழிவகுக்கும்."இதே வேளையில், இந்திய அரசியல் வரலாற்றில் மிக நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ச்சியாகப் பதவியில் இருக்கும் பிரதமர் என்ற ஜவஹர்லால் நேருவின் சாதனையை ஜூன் 10 அன்று பிரதமர் மோடி முறியடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.