பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவேகியா நாட்டுக்கு இன்று முதல் முதல் 19-ம் தேதி வரை செல்ல உள்ளார். இந்தப் பயணத்தின்போது 52-வது ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றார். அவரை அதிகாரிகள் அனுப்பு வைத்தனர்.
பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின்போது நாளை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதன்மூலம் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையிலான உறவை மேலும் வலுவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஸ்டார்ட்-அப், வென்ச்சர் கேப்பிட்டல் உள்ளிட்ட முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான புதிய முயற்சிக்கான நிகழ்வில் பிரதமர் மோடி மற்றும் அதிபர் மேக்ரான் பங்கேற்க உள்ளனர்.
அதன்பின், இரண்டாவது கட்டமாக பிரதமர் மோடி ஸ்லோவேகியா பயணிக்கிறார். அந்நாடு விடுதலை (1993) பெற்ற பிறகு இந்திய பிரதமர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணமாக இது அமைந்துள்ளது. இந்த பயணத்தில் அந்நாட்டின் பிரதமர் ராபர்ட் பிகோ, ஜனாதிபதி பீட்டர் பெல்லெக்ரினி ஆகியோரை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த பயணத்தின்போது இருதரப்பு வணிகம், முதலீடு, ஆட்டோமொபைல் மற்றும் ரயில்வே உள்ளிட்ட உற்பத்தி துறை சார்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் சர்வதேச அளவிலான பொருளாதார மீட்சி, உலக நாடுகளின் ஒற்றுமை மற்றும் பொறுப்பான ஏஐ பயன்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி, சந்தித்துப் பேச வாய்ப்புள்ளது.