பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா உலகளவில் முன்னணி பொருளாதார சக்தியாகத் திகழ்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நாட்டின் உயர் பதவிகளில் உள்ள தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவரது 25 ஆண்டுகால பொதுச்சேவையை கொண்டாடும் வகையில் நாடு தழுவிய ஒரு மாத சேவை பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், குஜராத்தின் முதலமைச்சராகவும் பின்னர் நாட்டின் பிரதமராகவும் கடந்த 25 ஆண்டுகளாகப் பிரதமர் மோடி ஆற்றிவரும் இணையற்ற பொதுச்சேவையையும், தேசக் கட்டுமானப் பணிகளையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். நல்ஆளுமைக்கு அவர் பல புதிய இலக்கணங்களை உருவாக்கியுள்ளதோடு, நாட்டின் பாரம்பரியத்தையும் நவீன வளர்ச்சியையும் சமநிலையில் கொண்டு செல்லும் அவருக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க இறைவனை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
அதேபோல், துணைக் குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்தில், பிரதமர் மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் இந்தியா உலகளவில் முன்னணி பொருளாதார சக்தியாகத் திகழ்கிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திய டிஜிட்டல் புரட்சி, உள்கட்டமைப்பு மற்றும் விண்வெளித் துறையில் இந்தியா அடைந்துள்ள அபார வளர்ச்சியை அவர் பட்டியலிட்டுப் பாராட்டியுள்ளார்.
பிரதமரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 முதல் அவர் முதன்முதலில் குஜராத் முதலமைச்சராக பொறுப்பேற்ற அக்டோபர் 7-ஐத் தாண்டி, அக்டோபர் 17 வரை ஒரு மாத காலத்திற்கு 'சேவா சங்கல்ப் அபியான்' (சேவை உறுதிமொழிப் பிரசாரம்) என்ற சிறப்பு இயக்கத்தை பாரதிய ஜனதா கட்சி தொடங்கியுள்ளது. இதில், நாடு முழுவதும் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் மற்றும் தூய்மைப் பணிகள் நடத்தப்படும். இன்று மாலை பொதுமக்கள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்கும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக சென்றடைவதை உறுதி செய்ய 'சேவை சேது' முகாம்களும், இளைஞர்களை ஒருங்கிணைக்கும் 'சேவை யாத்திரைகளும்' நடத்தப்படவுள்ளன. மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பல மாநில முதலமைச்சர்கள் இந்த சேவை இயக்கத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கி வைத்துள்ளனர். மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் மற்றும் பல முக்கியத் தலைவர்களும் பிரதமருக்குத் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.