இந்தியா

பி.எம். கிசான் திட்டத்தில் ரூ.60 கோடி மோசடி கண்டுபிடிப்பு

பி.எம்.கிசான் திட்டத்தில் ரூ.60 கோடி மோசடி கண்டரியப்பட்டதை தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் விவசாயிகள் பயனடைவதற்காக மத்திய அரசாங்கத்தால் அறிமுகம் செய்யப்பட்ட பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் (தகுதியான விவசாயிகளுக்கு வருடந்தோறும் 6 ரூபாய் நிதியுதவி திட்டம்) ரூபாய் 60 கோடிக்கும் அதிகமான அளவில் மோசடி நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து துறை ரீதியான விசாரணையையை மேற்கொள்ளுமாறு வேளாண்மை துறை இயக்குநர் அஷ்வினி குமார் சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

பிரதன் மந்திரி கிசான் சம்மான் நிதி

இந்தியாவில் மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் தகுதியுள்ள விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த தொகையானது நேரடி பணப் பறிமாற்றம் மூலம் விவசாயிகளின் ஆதார் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற விரும்பும் விவசாயிகள், தங்களது கைபேசிகள் மூலமாகவோ அல்லது ஜன் சேவா கேந்திரங்கள் வழியாகவோ பதிவு செய்ய வேண்டும்.

இதையடுத்து விண்ணப்பங்கள் முதலில் தாலுகா அளவில் பரிசீலிக்கப்பட்டு, பின்னர் மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பப்படுகின்றன.

மாவட்ட, மாநில மற்றும் மத்திய அளவில் சரிபார்க்கப்பட்ட பிறகு, தகுதியுள்ள பயனாளிகள் இந்த திட்டத்தின் கீழ் நிதி உதவியை பெறுகிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் மோசடி

இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள குண்டா தாலுகாவில் வழக்கமான செயல்முறையின் மூலம் பதிவு செய்ய முடியாத விவசாயிகள் பலன்பெறும் வகையில், தாலுகா அளவில் நேரடி நுழைவு வசதி அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள், வழக்கமான சரிபார்ப்பு வழிமுறையை தவிர்த்து, நேரடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதன் பதிவுகளை ஆய்வு செய்தபோது, குண்டா தாலுகாவில் பெருமளவிலான சந்தேகத்திற்கிடமான பதிவுகள் இடம்பெற்றிருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

மேலும் இந்த வழிமுறை வழியாக பதிவு செய்திருந்த பல பயனாளிகள், சிறார்கள் எனவும் மாவட்டத்திற்கு வெளியேயும் மாநிலத்திற்கு வெளியேயும் வசிப்பவர்கள் எனவும் தெரியவந்தது.

இந்த முறைகேடுகளை தொடர்ந்து நடத்தப்பட்ட துறைசார் விசாரணையில், நேரடி பதிவு வசதியை பயன்படுத்தி 3,18,846 பதிவுகள் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது.

இந்த பதிவுகள் தொடர்பாக கூறப்படும் மோசடி பணப்பட்டுவாடா மதிப்பு ரூ.60 கோடியை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இணையத்தில் இருந்து நேரடி நுழைவு வசதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை அடுத்து வேளாண்மை துறை துணை இயக்குநர் அஷ்வினி குமார் சிங் காவல்துறையிடம் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து 1700 ஐபி முகவரிகள் மற்றும் போலி பயனாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் கண்காணிப்பாளர் தீபக் பூக்கர் தெரிவித்தார்.