இந்தியாவில் தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக, நீண்ட காலம் உழைக்கக்கூடிய பிளாஸ்டிக் (Polymer) ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்வதற்கான முதற்கட்ட பணிகளை இந்திய ரிசர்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளது. இதன் தொடக்கமாக, அடுத்த ஆண்டு முதல் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளை சோதனை முறையில் புழக்கத்தில் விட ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது.
ஆர்பிஐ-இன் நாணய அச்சடிப்பு நிறுவனமான பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட், இந்த பிளாஸ்டிக் நோட்டுகளை தயாரிப்பதற்கான பிரத்யேக 'பாலிமர் சப்ஸ்ட்ரேட்' தாள்களை வழங்க உலகளாவிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துடெண்டர் வெளியிட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 18 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 68,000 ரீம்கள் பாலிமர் தாள்கள் முதற்கட்டமாக கோரப்பட்டுள்ளன. 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகளுக்கு தலா 34,000 ரீம்கள் பயன்படுத்தப்படும் (ஒரு ரீம் என்பது 500 தாள்களைக் கொண்டது).
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்த போதிலும், ரொக்கப் பணத்தின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்கவே இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது.
சாதாரண காகித நோட்டுகளை விட பிளாஸ்டிக் நோட்டுகள் 4 முதல் 5 மடங்கு அதிக காலம் உழைக்கும். இவை எளிதில் கிழியாது; தண்ணீர், எண்ணெய் போன்றவற்றால் பாதிக்கப்படாது.
காகித நோட்டுகள் எளிதில் அழுக்கடைந்து 'அழுக்கு நோட்டுகளாக' மாறிவிடுகின்றன. ஆனால், பாலிமர் நோட்டுகள் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியாக்களை உறிஞ்சாது என்பதால் எப்போதும் சுத்தமாக இருக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பழைய காகித நோட்டுகளை அழித்துவிட்டு, புதிய நோட்டுகளை அச்சடிக்க ஆர்பிஐ ஆயிரக்கணக்கான கோடிகளைச் செலவிடுகிறது. பிளாஸ்டிக் நோட்டுகள் நீண்ட காலம் உழைக்கும் என்பதால், இந்த அச்சடிப்புச் செலவு பெருமளவு குறையும்.
இந்த பாலிமர் நோட்டுகளில் வெளிப்படையான விண்டோ, உலோக எண்கள், காந்த இழை போன்ற அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும். இதனால் கள்ள நோட்டுகளைத் தயாரிப்பது முற்றிலும் சாத்தியமற்றதாக மாறும்.
நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருத்தில் கொண்டு, இந்த டெண்டரில் பங்கேற்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆர்பிஐ கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
* சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் எந்தவொரு வணிகத் தொடர்பும் இல்லாத நிறுவனங்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும்.
* மூலப்பொருட்களை இந்த இரு நாடுகளிலிருந்தும் பெறக்கூடாது.
* இதற்கு முன் சீனா அல்லது பாகிஸ்தானில் பணியாற்றிய ஊழியர்களை இந்த இந்தியத் திட்டத்தில் பணியமர்த்தக் கூடாது.
இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகமான உடனே பழைய காகித நோட்டுகள் செல்லாததாகிவிடாது. இரண்டுமே ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருக்கும். அடுத்த ஆண்டு தொடங்கும் இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றி மற்றும் மக்களின் வரவேற்பைப் பொறுத்து, 2027-ஆம் ஆண்டிற்குப் பிறகு நாடு முழுவதும் அனைத்து நோட்டுகளும் பிளாஸ்டிக் நோட்டுகளாக மாற்றப்படும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பாலிமர் பிளாஸ்டிக் கரன்சி முறையைப் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.