இந்தியா

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் புதிய தலைவராக பியூஷ் சிங் நியமனம்!

நீர் பற்றாக்குறை காலங்களில் நீர் மேலாண்மையை ஒருங்கிணைப்பது ஆகியவை ஆணையத்தின் முதன்மைப் பணிகளாகும்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பியூஷ் சிங் ஐஏஎஸ், ஆணையத்தின் தொடர் கூட்டங்கள், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர் பங்கீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றி வந்த எஸ்.கே.ஹல்தார் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஆணையத்தின் புதிய தலைவராக பியூஷ் சிங் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இந்தத் தலைமைப் பொறுப்பு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டு முதல் ஆணையத்தின் முழுநேரத் தலைவராகச் செயல்பட்டு வந்த எஸ்.கே.ஹல்தார் ஓய்வு பெற்றதை அடுத்து, இந்த நிர்வாக மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீர் பங்கீடு

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையிலான காவிரி நதிநீர் பங்கீட்டை ஒழுங்குபடுத்துவதற்காக 2018-ஆம் ஆண்டு இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கான நீர் பகிர்வை உறுதி செய்வது, முக்கிய நீர்த்தேக்கங்களின் செயல்பாடுகள் மற்றும் நீர் வெளியீட்டைக் கண்காணிப்பது, பற்றாக்குறை காலங்களில் நீர் மேலாண்மையை ஒருங்கிணைப்பது ஆகியவை ஆணையத்தின் முதன்மைப் பணிகளாகும்.

காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் பருவமழைப் பற்றாக்குறை காலங்களில் நீர் வெளியீடு தொடர்பாகத் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தொடர்ந்து விவாதங்களும் சட்டப் போராட்டங்களும் நடைபெற்று வரும் சூழலில், இந்தத் தலைமை மாற்றம் கவனம் பெற்றுள்ளது. 2000-ஆம் ஆண்டு மகாராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான பியூஷ் சிங், தற்போது மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் 'தேசிய நீர் இயக்கத்தின்' பணி இயக்குநராகவும், கூடுதல் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பியூஷ் சிங் ஐஏஎஸ், ஆணையத்தின் தொடர் கூட்டங்கள், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழுவின் பரிந்துரைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான நீர் பங்கீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வார். தேசிய நீர் இயக்கத்தின் பணிகளுடன் சேர்த்து, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் பதவியையும் அவர் கூடுதல் பொறுப்பாகக் கவனிப்பார்.

SCROLL FOR NEXT