இந்தியா

முதலீடுகளை ஈர்க்க பியூஷ் கோயல் ஜப்பான் பயணம்

இருதரப்பு வர்த்தகம், முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் குழு நாளை முதல் 27 வரை ஜப்பானுக்கு 4 நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 4 நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் செல்கிறார். ஆகஸ்டு 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நான்கு நாட்களில் ஜப்பானின் டோக்கியோ, நகோயா, ஒசாகா நகரங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ஜப்பான் தொழில்துறை அமைச்சர், முன்னணி தொழிலதிபர்கள், ஜப்பான் வணிக கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் பியூஷ் ஆலோசிக்க உள்ளார்.

உற்பத்தி, குறைக்கடத்திகள் (செமிகண்டக்டர்), தூய்மையான எரிசக்தி, எஃகு, வாகனத் துறை, நிதிச் சேவைகள், சுகாதாரம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான வர்த்தகப் பிரதிநிதிகள் கொண்ட குழு அவருடன் ஜப்பான் செல்கிறது.

அத்துடன், 1,500-க்கும் மேற்பட்ட முன்னணி ஜப்பானிய நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச அமைப்பான கெய்டன்ரென்(ஜப்பான் வர்த்தகக் கூட்டமைப்பு) சார்பில் நடத்தப்படும் வட்டமேசை மாநாட்டில் பியூஷ் கோயல் பங்கேற்கவுள்ளார்.

ஜப்பான் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் அகசாவா ரியோசேவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் பியூஷ் கோயல், ஜப்பானிய அரசு, நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினர்களையும் சந்திக்கிறார். மேலும், ஜப்பானில் உள்ள இந்திய சமூகத்தினருடனும் அவர் கலந்துரையாடுகிறார்.