கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் கேரளாவின் புதிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகிறார்.
திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி சந்தித்த படுதோல்வியைத் தொடர்ந்து, கட்சி ஆதரவாளர்களிடையே தலைமை மாற்றம் வேண்டும் என்ற வலுவான கோரிக்கை எழுந்தது.
கட்சிக்குள்ளும் ஒரு பிரிவு தலைமை மாற்றத்தை நாடியதாகக் கூறப்பட்டது. இதனால் முன்னாள் நிதியமைச்சர் கே.என். பாலகோபால் எதிர்க்கட்சித் தலைவராக ஆகக்கூடும் என்ற யூகங்களும் இருந்தன.
இந்நிலையில் பினராயி விஜயனின் நீண்டகால அனுபவம் பலம் சேர்க்கும் என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்மூலம் கடந்த ஆட்சியில் முதலமைச்சராக இருந்த பினராயி விஜயன் தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும், கடந்த முறை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த வி. டி. சதீசன் தற்போது புதிய முதலமைச்சராகவும் பொறுப்பேற்கின்றனர்.
நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (UDF) 102 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி (LDF) வெறும் 35 இடங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தது. இதில் சிபிஎம் கட்சி மட்டும் 26 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.