இந்தியா

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் தொடங்கும் 3ம் கட்ட எஸ்.ஐ.ஆர். பணிகள்!

16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மே.30 முதல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள் தொடங்குகின்றன.

இந்திய தேர்தல் ஆணையம், 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.

ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர், தாதர் மற்றும் நகர் ஹவேலி; டாமன் மற்றும் டையூ, உத்தரகாண்ட், ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஹரியானா, சண்டிகர், தெலங்கானா, பஞ்சாப், கர்நாடகா, மேகாலயா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், டெல்லி, நாகாலாந்து, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்றாம் கட்டப் பணிகள் இம்மாதம் தொடங்கி, டிசம்பருக்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அங்கு மட்டும் முதற்கட்டமாக பணிகள் நடத்தப்பட்டன.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டப் பணிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

இந்த இரண்டாம் கட்ட எஸ்.ஐ.ஆர். பணிகள் மூலம், தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 74 லட்சம் வாக்காளர் பெயர்களும், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 2.04 கோடி பெயர்களும் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.