இந்தியாவில் இன்று ஒரேநாளில் வணிகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர் விலை அதிரடியாக ரூ. 993 உயர்த்தப்பட்டுள்ளது. 5 கிலோ எடையுள்ள சிறிய வகை வணிக சிலிண்டரின் விலையும் இன்று ரூ.261 உயர்த்தப்பட்டுள்ளது.
நல்வாய்ப்பாக, வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் போர் தொடங்கியதிலிருந்தே விலை ஏற்றப்பட்டு வரும்நிலையில், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் அடுத்து பெட்ரோல், டீசல் விலை உயரும் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
“நான் முன்பே சொல்லியிருந்தேன். தேர்தலுக்கு பின்னர் விலைவாசி உயரும் என்று.
இன்று வணிக சிலிண்டரின் விலை ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரேநாளில் உயர்த்தப்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு இது. இதுதான் தேர்தலுக்கான விலை. பிப்ரவரி முதல் இதுவரை ரூ.1,380 அதிகரித்துள்ளது. வெறும் 3 மாதங்களில் 81% என்பது மிகப்பெரிய விலை உயர்வு.
டீக்கடை, தாபா, ஹோட்டல், பேக்கரி, இனிப்பகம் என அனைவரது சமையலறை மீதும் சுமை அதிகரித்துள்ளது. இது உங்கள் தட்டிலும் (உணவு விலையிலும்) பாதிப்பை ஏற்படுத்தும். முதலில் சிலிண்டர் விலையை ஏற்றியுள்ளனர். அடுத்து பெட்ரோல்-டீசல்தான்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.