இந்தியா

Paytm Payments Bank: பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து.. ரிசர்வ் வங்கி அதிரடி - என்ன காரணம்?

வாடிக்கையாளர்கள் மற்றும் டெபாசிட் செய்தவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி உறுதியளித்துள்ளது

பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரிசர்வ் வங்கி அதிரடியாக ரத்து செய்துள்ளது.

இதன் மூலம் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி இனி எந்தவொரு வங்கிச் செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது.

வங்கிச் செயல்பாடுகள் டெபாசிட் செய்தவர்களின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பேடிஎம் வங்கி செயல்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கியின் நிர்வாக முறை பொதுமக்களின் நலனுக்கு எதிராக இருந்ததாலும், உரிமம் வழங்குவதற்கான நிபந்தனைகளைத் தொடர்ந்து மீறியதாலும் வங்கி ஒழுங்குமுறைச் சட்டம் 1949, பிரிவு 22(4)இன் கீழ் இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் மற்றும் டெபாசிட் செய்தவர்கள் அச்சப்படத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி உறுதியளித்துள்ளது

வங்கியில் டெபாசிட் செய்துள்ள அனைவருக்கும் அவர்களது பணத்தைத் திருப்பித் தருவதற்குத் தேவையான போதுமான பண இருப்பு வங்கியிடம் உள்ளது.

வங்கியை முழுமையாக மூடும் நடைமுறைகளுக்காக உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.